வியாழன், 16 நவம்பர், 2017

உயிரினங்கள் வாழும் சூழல் கொண்ட புதிய கிரகம் மிக அருகில் கண்டுபிடிப்பு !

தினத்தந்தி :கிரெனோபிள்,நமது பால்வெளி மண்டலத்தின் மூலையில் சிறிய சிவப்பு நட்சத்திரம் ஒன்று உள்ளது.பூமியின் அளவையொத்த கிரகம் ஒன்று அதனருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இதனை வானியியலாளர்கள் இன்று அறிவித்துள்ளனர்.இந்த கிரகத்தில் திரவ வடிவிலான நீர் இருக்க கூடும்.அதனால் வாழ்வதற்கான சூழல் உள்ளது.அந்த சிவப்பு நட்சத்திரத்தின் பெயர் ராஸ் 128.  இந்த நட்சத்திரத்தினை ஒரே ஒரு கிரகம் சுற்றி வருகிறது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.இதற்கு முன் டிரேப்பிஸ்ட் 1 என்ற சிவப்பு நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.அது பூமியில் இருந்து 40 ஒளி வருடங்கள் தொலைவு கொண்டது.பூமியின் அளவு கொண்ட 7 கிரகங்கள் அதனை சுற்றி வருகின்றன.ஆனால் மற்ற நட்சத்திரங்களை போன்று இல்லாமல் ராஸ் 128 மிக அமைதியான, கதிரியக்க சிதறல்கள் எதுவும் இல்லாத ஒன்றாக இருக்கிறது.கதிரியக்க சிதறலானது உயிரினங்கள் கிரகத்தில் வாழ்வதற்கான சூழலை தொடங்குவதற்கு முன்பே முற்றிலும் அழித்து விடும்.இது பூமியில் இருந்து 11 ஒளி வருடங்கள் தொலைவில் உள்ளது.

ராஸ் 128 நட்சத்திரத்தில் இருந்து அதனை சுற்றி வரும் கிரகம் 4.5 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது.  இது சூரியன் மற்றும் பூமிக்கு இடையேயான 93 மில்லியன் மைல்கள் என்ற தொலைவை விட மிக குறைவு.  சூரிய குடும்பத்தின் மையத்தில் உள்ள புதன் கிரகம் கூட சூரியனில் இருந்து 36 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது.
பூமி மற்றும் சூரியன் இடையேயான தொலைவை ஒத்து, சிவப்பு நட்சத்திரம் மற்றும் புதிய கிரகம் இடையேயான தொலைவு அமைந்து இருந்தால் அது மிக குளிராக இருக்கும்.  ஆனால் ராஸ் 128ஐ மிக நெருங்கிய நிலையில் புதிய கிரகம் உள்ளது.  அதனால் திரவ நீருக்கு தேவையான வெப்பம் உறிஞ்சப்படுகிறது.  இந்த திரவ நீர் வாழ்வதற்கு தேவையான பொருள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை: