திங்கள், 15 ஜனவரி, 2018

ஏன் எங்கள் மதத்தை மட்டும் குறிவைத்துத் தாக்குகிறீர்கள்?'

Ganesh Babu : உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள பகுத்தறிவாளர்கள் மீதும் அந்தந்த பகுதிகளில் வாழும் பெரும்பான்மை மதத்தினர் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு..
'ஏன் எங்கள் மதத்தை மட்டும் குறிவைத்துத் தாக்குகிறீர்கள்?' என்பது..
அதற்கு எல்லா பகுத்தறிவாளர்களின் ஒரே பதில்,
"எல்லா மதங்களையும் மூடத்தனம் என்று கருதித்தான் நிராகரிக்கிறோம். ஆனால் நான் பிறந்த மண்ணில் எந்த மதத்தின் மூடத்தனங்களால் பெரும்பான்மையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதோ, அந்த மதத்தையே கூடுதலாக எதிர்க்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. மதங்களின் மீதான வெறுப்பைவிட, மனிதர்களின் மீதான நேசமே அதற்குக் காரணம்!"
இன்னும் தெளிவாகச் சொல்வேண்டுமானால், இந்தியாவில் பிறந்த பெரியார் இந்துமதத்தை கூடுதலாக எதிர்த்தார், வங்கதேசத்தில் பிறந்த தசுலிமா நசுரீன் இசுலாமியத்தை கூடுதலாக எதிர்க்கிறார், இங்கிலாந்தில் வாழும் ரிச்சார்டு டாக்கின்ஸ் கிறுஸ்துவத்தை கூடுதலாக எதிர்க்கிறார். இவர்களிடம் சென்று ஏன் எல்லா மதங்களையும் சரி சமமாக விமர்சிக்கவில்லை என்று கேட்பது நியாயமா?
அந்தந்தப் பகுதிகளில் வாழும் பகுத்தறிவாளர்கள் அங்குள்ள சிறுபான்மையின மதத்தினரை அதிகம் விமர்சிக்காததற்கு மற்றொரு நுட்பமான, வெளிப்படையான காரணமும் உண்டு. அத்தகைய சிறுபான்மையின எதிர்ப்பு, அங்குள்ள பெரும்பான்மைத்துவ மதவாதம் பேசுவோருக்கு ஆதரவாகப் போய் முடியக்கூடும்.

உதாரணத்திற்கு, வங்கதேசத்தில் பிறந்த நாத்திகர் ஒருவர் 'நான் எல்லா மதங்களையும் கடுமையாக விமர்சிக்கும் நடுநிலை நக்கீரன்' என்று காட்டிக்கொள்வதற்காக அங்கு சிறுபான்மை இந்துக்களையும் கடுமையாக விமர்சித்தால், அது ஏற்கனவே அங்கு சிறுபான்மை இந்துக்களை ஒடுக்கும் பெரும்பான்மைத்துவம் பேசும் இசுலாமிய அமைப்புகளின் கருத்துக்கு வலுசேர்ப்பதாக ஆகாதா? அதையே இந்தியாவில் செய்தால், அது இங்குள்ள பெரும்பான்மை மதவெறியர்களான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவுக்கு ஆதரவாகத்தானே போய் முடியும்? பகுத்தறிவு உள்ளவன் எவனாவது அதைச் செய்வானா?
பகுத்தறிவாளர்கள் ஆதிக்கத்திற்கு எதிரானவர்கள். சமூகநீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் உறுதியோடு போராடுபவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக 'தான் எல்லோருக்கும் பொதுவான நிடுநிலை நக்கீரன்' என்று ஊரை ஏமாற்றாமல், பாதிக்கப்படும் மக்களின் பக்கம் தயங்காமல் நிற்கும் துணிவுடையவர்கள்.
பகுத்தறிவாளர்கள் கூடுமானவரை அந்தந்த நாடுகளில் வாழும் 'சிறுபான்மையின மக்களின் இயல்பான நட்பு சக்தியாக இருக்கவேண்டும்' என்ற நிலைப்பாட்டை எடுப்பதும் அத்தகைய ஆதிக்கத்திற்கு எதிரான துணிச்சலால்தான்!
இந்தியாவைப் பொறுத்தவரை, மற்ற எந்த மதங்களிலும் இல்லாத சமத்துவத்திற்கு எதிராக, பெண் விடுதலைக்கு எதிராக, இந்துக்களையே இழிவுப்படுத்துகிற மதமான இந்து மதம் இங்கே பெரும்பான்மையாக இருப்பதனால், அதை நாம் கூடுதலாக எதிர்க்கவேண்டியுள்ளது.
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வகுப்புவாரி இட-ஒதுக்கீடு, ஆலய நுழைவு உரிமை, தீண்டாமை ஒழிப்புச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, கணவனை இழந்தப் பெண்ணுக்கு மறுமணம் செய்துக்கொள்ளும் உரிமை என்று 80% பெரும்பான்மை இந்துக்கள் இன்று சட்டத்தின் பாதுகாப்போடு அனுபவித்துவரும் அனைத்து உரிமைகளையும் இந்துமதத்தை எதிர்த்துப் போராடித்தான் நாம் பெறமுடிந்தது.
ஆக, எங்களின் மத எதிர்ப்பு என்பது மதங்களின் மீதான கோபத்தால் வருவதல்ல, மனிதர்களின் மீதான நேசத்தால் வருவது.

கருத்துகள் இல்லை: