வியாழன், 18 ஜனவரி, 2018

விமானிக்கு இடம்தெரியாமையால் கூகுளின் உதவியுடன் பலாலி சென்ற அமைச்சர் !

அமைச்சர் மஹிந்த அமரவீர பயணித்த உலங்குவானூர்தியின் விமானிக்கு பலாலி விமான நிலையம் தெரியாதமையால் ஆகாயத்தில் சுற்றிய நிலையில் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் பலாலி சென்ற சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பட்டத் திருவிழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்துகொள்வதற்காக  கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர கொழும்பிலிருந்து உலங்குவானூர்தியொன்றில் பயணித்துள்ளார்.
அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு செல்லவிருந்த போதிலும், தலைமன்னர் நோக்கி விமானி உலங்குவானூர்தியை செலுத்தியுள்ளார்.

பலாலி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு பதிலாக தலைமன்னார் தீவுக்கு அருகில் விமானம் செல்வது குறித்து அமைச்சர் விமானியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் செல்லும் வழி தனக்கு தெரியாதென விமானி தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் உடனடியாக கூகுள் வரைப்படத்தின் உதவியுடன் விமானத்தை பலாலி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு விமானி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
பொதுவாக உலங்குவானூர்தியின் மூலம் கொழும்பில் இருந்து பலாலி செல்லவதற்கு ஒரு மணித்தியாலம் மாத்திரமே செலவிடப்படுகின்ற நிலையில், நேற்றைய தினம் கொழும்பிலிருந்து பலாலி விமான நிலையத்தை சென்றடைய 2 மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளது.
பலாலி விமான நிலையம் தெரியாது விமானிக்கு நீண்ட நேரம் வானில் சுற்றிய நிலையில் தரையிறங்கும் போது உலங்குவானூர்தியின் எரிபொருள் தீர்ந்த நிலையில்  அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இதையடுத்து விமானியின் விமானி அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
thenee.com

கருத்துகள் இல்லை: