ஞாயிறு, 20 மே, 2018

சத்திஸ்கார் நக்சலைட் தாக்குதல் : 6 பாதுகாப்பு படையினர் உயிரழப்பு!

நக்சலைட் தாக்குதல் : 6 வீரர்கள் பலி!
மின்னம்பலம்: சத்தீஸ்கர் மாநிலத்தில்
நக்சலைட்டுகள் இன்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர் என போலீஸ் அதிகாரி டிஐஜி ரத்தன் லால் டங்கி தெரிவித்துள்ளார்.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியின் சோல்னார் கிராமத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர்.
இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 6 பாதுகாப்புப் படை வீரர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 2 வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தண்டேவாடா டிஐஜி ரத்தன் லால் டங்கி, “கிரந்துல் மற்றும் சோல்னார் கிராமங்களுக்கிடையே சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அப்பகுதிக்கு கட்டுமானப் பொருட்களை எடுத்துச் சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
தொடர்கதையாகும் வீரர்கள் பலி
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் புர்கப்பல்-சின்டாகுபா பகுதியில் சாலைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 99 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது 300க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர்கள் நான்கு பேர் உட்பட 26 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மரணமடைந்தனர்.
2017 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் ஒருவர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
2016ஆம் ஆண்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 159 வீரர்கள் உயிரிழந்தனர். 2015ஆம் ஆண்டில் 131 பேர் உயிரிழந்தனர். 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தண்டேவாடாவில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 76 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: