ஞாயிறு, 20 மே, 2018

வெட்கங்கெட்ட வல்லரசாக இந்தியா உருப்பெறுமா?

மின்னம்பலம்: பா.சிவராமன். : கிராமப்புற இந்தியாவும் இந்திய அரசும் - 4
அதிக வளர்ச்சி வேலைவாய்ப்பையும் கூலியையும் அதிகரிக்கும் என்பது பண்டைய கருத்து. ஆனால், 2014-15க்குப் பிறகு, கிராமப்புறப் பகுதிகள் அதிக வளர்ச்சியைக் கண்டாலும் வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது. கிராமப்புற நிகர உற்பத்தி ஆண்டுக்கு 7.45% வளர்ந்திருக்கிறது. வேலைவாய்ப்பு -0.28% என்ற எதிர்மறையான விகிதத்தில் வளர்ச்சியுற்றது. அதாவது குறைந்திருக்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு உண்மையில் சுருங்கியது என்பதை ரமேஷ் சந்த்தின் விவாதத்துக்கான அறிக்கை காட்டுகிறது.
பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக மோடியால் நியமிக்கப்பட்ட சுர்ஜித் பல்லா அவர்கள் சமீபத்தில் தவறாகக் கருத்து தெரிவித்து எசகுபிசகாக மாட்டிக்கொண்ட சர்ச்சையும் கிராமப்புற வேலைவாய்ப்பு நெருக்கடியை வெளிச்சமிட்டுக் காட்டியது. கிராமப்புறத் தொழிலாளர் நெருக்கடியில் கிராமப்புற வேலைவாய்ப்பு நெருக்கடி ஆற்றும் பங்கு கொஞ்சநஞ்சம் அல்ல. இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிப்பதற்கான மையத்தின் (Centre for Monitoring Indian Economy/CMIE) புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டு 1.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக சுர்ஜித் பல்லா கூறினார்.
ஆனால் CMIE தலைவர் மகேஷ் வியாஸ் இது தவறு என்று கூறினார். உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 14 லட்சம் என்று காட்டியதோடு மட்டுமல்லாமல், பல்லா CMIE புள்ளிவிவரங்களை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் அம்பலப்படுத்தினார். ஜே.என்.யூவின் ஹிமான்ஷு போன்ற பலரும் இந்த விவாதத்தில் பங்கெடுத்தனர். கிராமப்புற வேலைவாய்ப்பு நெருக்கடியைப் பற்றிய விரிவான பார்வையைப் பெற இந்த விவாதம் உதவியது.
சிறப்புக் கட்டுரை: வெட்கங்கெட்ட வல்லரசாக இந்தியா உருப்பெறுமா?
விவசாயத் தொழிலாளர்களின் கடன் நெருக்கடி
பாட்டியாலா பஞ்சாபி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் குழு மேற்கொண்ட ஆய்வை மேற்கோள் காட்டி 7 ஆகஸ்ட் 2017 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் சஞ்சீவ் வர்மா ஒரு கட்டுரை எழுதினார். மாநிலத்தில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கடன்பட்டிருக்கிறார்கள் என ஆராய்ச்சி காட்டுகிறது. “பஞ்சாப் மாநிலத்தில் 80%க்கும் மேல் விவசாயத் தொழிலாளர்கள் கடன்பட்டிருக்கிறார்கள். மாநிலத்தின் தென்மேற்கு பிராந்தியத்தில் 99.05% பேரும், மத்தியப் பிராந்தியத்தில் 85.81% பேரும் ஷிவாலிக் மலையடிவாரப் பிராந்தியத்தில் 80.06% பேரும் தனியாரிடம் கடன்பட்டிருக்கிறார்கள். இவர்கள் 22%இல் இருந்து 28% வரை வட்டி செலுத்திக் கடன் வாங்கியிருக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
NSSOவின் 70ஆவது சுற்று அகில இந்தியக் கடன் மற்றும் முதலீட்டு சர்வே அறிக்கை காட்டியது என்னவென்றால் 2013-14இல் கிராமப்புற இந்தியாவில் 16.9% எஸ்.டி. குடும்பங்களும் 30.9% எஸ்.சி. குடும்பங்களும் 35.7% ஓ.பி.சி. குடும்பங்களும் கடன்பட்டிருக்கின்றன. இம்மூன்று பிரிவினரும் சராசரியாகக் குடும்பம் ஒன்றுக்கு முறையே ரூ.9,610, ரூ.24,458, ரூ.36,091 கடன் வாங்கியுள்ளன.
இங்கு கிராமப்புற விவசாயத் தொழிலாளர் பெண்கள், சுயஉதவிக் குழுக்களில் வாங்கியுள்ள கடன்களையும் அவர்கள் கட்டும் அதீத வட்டி பற்றிய விவரங்களையும் சேர்க்கவில்லை. எனினும், சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பலர் கடன் தொல்லையால் ஆந்திரப் பிரதேசத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் உழைப்பாளர்கள் குறைந்துவரும் போக்கு
2004-05க்கும் 2011-12க்குமிடையே 3.3 கோடி உழைப்பாளர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறினர் என்று ரமேஷ் சந்த் கட்டுரை காட்டுகிறது. இதில் 2.7 கோடி (81%) பெண்கள். 60 லட்சம் மட்டுமே (19%) ஆண்கள். விவசாயத்தை விட்டு விலகிய 2.7 கோடி பெண்களில் 50 லட்சம் பெண்கள் மட்டுமே விவசாயம் சாராப் பணிகளில் வேலை தேடிக்கொண்டனர். எஞ்சியவர்கள் உழைப்பு சக்தியை விட்டே விலகிவிட்டனர். முந்தைய பத்தாண்டுகளில் கிராமப்புற உழைப்பு சக்தி பெண்கள்மயமாகி வந்தது. அந்தப் போக்குக்கு இது நேர் எதிரானதாகும்.
கிராமப்புற விவசாயம் சாராத் துறையின் துடிப்பான வளர்ச்சி பெண்களுக்குச் சாதகமாக இல்லை. எனவே, தலித்துக்களையும் ஆதிவாசிகளையும் தவிர பெண்களும் கிராமப்புறத் தொழிலாளர் நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நெருக்கடியின் இதர சமூக பரிமாணங்களைப் பார்ப்போம்.
விவசாய உபரி மக்கள்தொகையின் ஒரு பெரும் பிரிவு விவசாயத்தை விட்டு வெளியேறினாலொழிய விவசாய நெருக்கடிக்கோ அல்லது கிராமப்புற ஏழையர் நெருக்கடிக்கோ தீர்வேதும் இல்லை என அனைத்து வகைப் பொருளாதார வல்லுநர்களும் கருதுகிறார்கள். ஆனால், மோடி அரசின் கீழ் நகர்ப்புறப் பகுதிகளிலும் வேலைவாய்ப்பு வளர்ச்சி தேங்கியிருப்பதால் கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்குக் குடிபெயர்ந்து செல்லும் வாய்ப்புகளும் அரிதாகவே உள்ளன.
உழைப்பாளர் சக்தியில் புதிதாகச் சேருபவர்கள் அனைவரையும் வேலையில் சேர்த்துக்கொள்ள ஆண்டுக்கு 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை மோடி அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை. பக்கோடா செய்து விற்பதும் வேலைவாய்ப்புதான் என்று அவர் கூறுகிறார். கோடிக்கணக்கான இளைஞர்கள் பக்கோடா செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அவற்றை யார் தின்பது? தக்கவைக்கக்கூடிய தரமான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் இதற்கான தீர்வு. 8 சதவிகிதத்தைவிடக் கூடுதலான பொருளாதார வளர்ச்சி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால், இத்தகைய வளர்ச்சி மோடிக்குக் கானல் நீராகவே உள்ளது.
அசல் ஊதியங்களில் முன்னேற்றம் இருந்தால் மட்டுமே கிராமப்புற வறுமை குறைகிறது. மேற்கண்ட முதல் இரு காலகட்டங்களில் கிராமப்புறக் கூலி விகிதங்கள் வேகமாகவும் நிலையாகவும் அதிகரித்ததே கிராமப்புற வறுமை வெகுவாகக் குறைந்ததற்குக் காரணம். ஆனால், இப்போது இந்த விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர் நெருக்கடி உதயமாகியிருப்பது இந்தப் போக்கைத் தலைகீழாகத் திருப்பி முதல் முறையாகக் கிராமப்புற வறுமை அதிகரிக்கவும் கூடும்; பட்டினிச் சாவுகளும் வேதனையில் இடம்பெயர்தலும் மீண்டும் நிகழும்.
உண்மையில், கேரளா, மகாராஷ்டிரம் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களில் முறையே பாலக்காடு, தானே போன்ற இடங்களில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் பட்டினிச் சாவுகள் ஏற்கெனவே நிகழ்ந்துள்ளன. கிராமப்புற ஏழைகளின் நெருக்கடி நீடிக்குமேயானால் கடந்த சில பத்தாண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத செழிப்பைக் கண்ட இந்தியாவின் பரந்த கிராமப்புறங்கள் ஒடிசாவின் பழைய கலஹாந்திகளைப் போல மாறக்கூடும்.

இந்தியாவைப் போன்ற வளர்ச்சியடைந்துவரும் சந்தைப் பொருளாதாரத்தில் கிராமப்புறக் கூலி அளவுகளில் நிகழும் மாற்றம் குறுகிய கால அளவில் பணவீக்கத்தின் மீதும் நீண்டகால அளவில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். கூலியளவு வெகுவாக உயர்ந்தால் விவசாயப் பொருள்களுக்கான, குறிப்பாக, உணவுப் பொருள்களுக்கான கிராக்கி அதிகரிக்கும். அது உணவுப் பொருள்களின் விலைவாசியை அதிகரிக்கும். அது நுகர்வையும் ஒட்டுமொத்த கிராக்கியையும் அதிகரிப்பதால் பொருளாதார வளர்ச்சிக்கு அது தூண்டுகோலாகவும் அமையும். ஆனால், நாம் காண்பது ஒரு விசித்திரமான கிராமப்புறத் ‘தேக்கப் பணவீக்கம்’ (stagflation). இது கிராமப்புற ஏழைகளின் உணவுப் பாதுகாப்புக்கும் ஊட்டச்சத்துப் பாதுகாப்புக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும்.
இந்தியாவின் ஊட்டச்சத்தின்மையை ‘தேசிய வெட்கக்கேடு’ என மன்மோகன் சிங் குறிப்பிட்டார். இந்தியா பெரும் ஊட்டச்சத்தின்மைப் பளுவுடன் வெட்கங்கெட்ட வல்லரசாக உயருமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
1960களில் காங்கிரஸ் அரசு அதிதீவிரப் பணவீக்கம், விவசாய அரங்கில் எதிர்மறையான வளர்ச்சி ஆகியவற்றின் மத்தியில் விவசாயத் தொழிலாளர் நெருக்கடியைப் புறக்கணித்தது. அது நக்சல்பாரி இயக்கம் தோன்ற வழி வகுத்தது. இந்திய அரசுக்கு நக்சலிசமே முதல் எதிரி என்றார் மன்மோகன் சிங். அவருடைய கருத்துடன் மோடி அரசு உடன்படுகிறது. ஆனால், அதேபோன்ற கிராமப்புறப் போராட்டங்களின் மறு எழுச்சிக்குக் காரணமாக அமைந்தவர் என்ற பெயருடன் மோடி அரசாங்கம் பதவியை விட்டு விலக நேரிடலாம்.
கிராமப்புற இந்தியாவும் இந்திய அரசும் – 1
கிராமப்புற இந்தியாவும் இந்திய அரசும் – 2
கிராமப்புற இந்தியாவும் இந்திய அரசும் – 3

கருத்துகள் இல்லை: