சனி, 22 ஜூலை, 2017

12 தீர்மானங்கள்! திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம்-

நக்கீரன் : தி.மு.க. விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்கள் –மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் 22.07.2017 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி அளவில் தி.மு.க. விவசாய அணி செயலாளர் டாக்டர் கே.பி. இராமலிங்கம் Ex.MP.  தலைமையில் விவசாய அணி செயலாளர் கரூர்  ம.சின்னசாமி மற்றும் விவசாய அணி துணை தலைவர்  கம்பம் இராமகிருஷ்ணன், Ex.MLA., ஆகியோர் முன்னிலையில் இணை செயலாளர் மாயவரம் ஆர்.அருட்செல்வன் Ex.MLA.,- மாநில துணை செயலாளர்கள் கே.முருகவேல், Ex.MLA., ஆர்.டி.ஏ.ஆதிசேஷன், ஆர்.கணேசன், கீழப்பாவூர் கு.செல்லப்பா, டேம் டி.வெங்கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்க கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் – 1திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தின் வரலாற்று பேரியக்கம் – இந்த இயக்கத்தின் மூல ஆதாரம் தலைவர் கலைஞர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட நமது “முரசொலி“ தலைவர் கலைஞர் தமிழ் இனத்தை பாதுகாக்க தன் பேனாவில் மை போட்டு எழுதாமல், தன் உதிரத்தை கொட்டி எழுதித்தான் நம்மை இந்த உச்சத்திற்கு கொண்டு வந்து சேர்த்தார் என்பதை நெஞ்சில் நிறுத்தி அவரது முரசொலிக்கு பவளவிழா, கழக செயல்தலைவர் தமிழக எதிர்கட்சி தலைவர் மாண்புமிகு தளபதி அவர்கள் முன்னின்று ஆகஸ்ட் 10 மற்றும் 11 தேதிகளில் மிகச் சிறப்பாக விழா நடத்துவதை தி.மு.க.விவசாய அணி நன்றியுடன் பாராட்டுவதுடன் - இவ்விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து விவசாய அணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.


தீர்மானம் – 2
தமிழகத்தில் விவசாயிகள் கடன் தொல்லையாலும் – கடுமையான வறட்சியாலும் – விளை பொருளுக்கு உற்பத்திக்குரிய விலை கிடைக்காமையாலும் 200க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் – தமிழகம் பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியுள்ள தமிழக ஆட்சியாளர்களுக்கு தி.மு.க. விவசாய அணி தன் வருத்தத்தையும் – கண்டனத்தையும் – தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம் - 3
உச்சநீதிமன்ற வலியுறுத்தலுக்கு பின்னரும் மத்திய அரசு காவிரி ஆணையத்தை அமைக்காமல் காலம் தாழ்த்துவது தமிழக மக்களுக்கு செய்யும் பெரும் அநீதியாகும். உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அறிவித்து அதற்கு சட்ட பூர்வமான அதிகாரத்தை வழங்க வேண்டுமென தி.மு.க. விவசாய அணி மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 4
தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகாலமாக இல்லாத அளவிற்கு மாபெரும் வறட்சி நிலவுவதாக மாநில அரசு, தன் அறிவிப்பில் சுட்டி காட்டியுள்ளது. ஆனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுவதுமாக நிவாரணம் வழங்க முன்வரவில்லை. பயிர் காப்பீட்டுத் திட்டத்திலும் மாபெரும் குளறுபடி நடந்து விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதனை தி.மு.க. விவசாய அணி கண்டிப்பதோடு உடனடியாக முழுமையான நிவாரணமும் – கடன் தள்ளுபடியும் மற்றும் பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வற்புறுத்துகிறது.

தீர்மானம் – 5
தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு தென்னையில் இருந்து “நீரா” பானம் இறக்க அனுமதி வழங்கியுள்ளதை தி.மு.க. விவசாய அணி வரவேற்று பாராட்டுகிறது.


ஆனால் தற்போது தமிழகத்தில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் வறட்சியால் காய்ந்து – செத்து மடிந்து விட்டது. இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு இறந்த மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூபாய் 10,000 வீதம் இழப்பீடு தொகையாகவும் – ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50,000 மறு சாகுபடிக்கு ஊக்க தொகையாகவும் வழங்க தி.மு.க. விவசாய அணி தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம் - 6
தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் கூட தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு அவர்கள் ஆலைக்கு கொடுத்த கரும்பிற்கான நிலுவை தொகையை கடந்த 3 ஆண்டு காலமாக வழங்காமல் ஏறத்தாழ ரூ.2000 கோடி நிலுவையில் உள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழக அரசு தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் நடப்பு அறவை பருவத்திற்கு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4500 வழங்க பரிந்துரைக்க  வேண்டுமென தி.மு.க. விவசாய அணி வற்புறுத்துகிறது.

தீர்மானம் - 7
தமிழகத்தில் உள்ள ஏரிகள் – குளங்கள் – நீர்வரத்து கால்வாய்கள் – வெள்ள பாதைகள் இவைகளில் உள்ள ஆக்கிரமைப்புகளை போர் கால அடிப்படையில் அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தி.மு.க. விவசாய அணி வற்புறுத்துவதோடு, தமிழக நீர் நிலைகளின் வரைபடங்களை ஒன்றிய அளவில் மக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டுமென தி.மு.க. விவசாய அணி வற்புறுத்துகிறது.


தீர்மானம் - 8
தமிழகத்தில் கிராமப்புறங்களில் இயங்கி வரும் வேளாண்மை கூட்டுறவு நாணய சங்கங்களின் – தலைவர்களும் – செயலாளர்களும் இணைந்து விவசாயிகள் பெயரில் பினாமிகளாக கடன் பெற்று அதன்பிறகு அரசு தள்ளுபடி செய்யும் போது அதனையும் இவர்களே பெற்று மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டு வருவதை தடுக்கும் வகையில் உயர்மட்ட விசாரணை கமிஷன் அமைப்பதுடன் மாதம் தோறும் வரவு செலவு பதிவேட்டை பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டுமென தி.மு.க. விவசாய அணி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் – 9
தமிழகத்தில் நிலவும் அனைத்து விவசாய பிரச்சனைகளுக்காகவும் குறிப்பாக முழுமையான கடன் தள்ளுபடி – காவிரி ஆணையம் அமைத்தல் – பவானி – பாலாறு, முல்லை பெரியாறு பிரச்சினைகள் – கரும்பு நிலுவைத் தொகை பெறுதல் – தமிழக நீர்நிலைகளை பாதுகாத்தல் – விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கோருதல் ஆகிய பிரச்சனைகளுக்காக தமிழக விவசாய சங்கங்கள் அரசியல் கட்சிகளின் ஆதரவோடு இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களும் முன்னின்று நடத்தும் போராட்டமான “ஆகஸ்ட் 16-ந் தேதி காலை 10.00 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் “விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்பாட்டத்திலும் ”தி.மு.க. விவசாய அணி கழக செயல் தலைவரின் அனுமதியோடு பங்கேற்று விவசாயிகள் போராட்டத்தை வெற்றியடையச் செய்வோம் என தி.மு.க. விவசாய அணி தீர்மானிக்கிறது. 

மேலும், இந்த போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகளையும் விளம்பர பணிகளையும் செய்வதற்கு அந்தந்த மாவட்ட செயலாளர்களின் அனுமதியும் ஆதரவும் ஆலோசனைகளையும் பெற்று, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகளோடு இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்படுகிறது. இதற்கான மாவட்ட அளவிளான ஒருங்கிணைப்புக் கூட்டங்களை மிக விரைவில் நடத்திட வேண்டுமென தி.மு.க. விவசாய அணி வலியுறுத்துகிறது.

தீர்மானம் – 10        
                            
 தமிழகத்தில் விவசாய பெருங்குடி மக்கள் விவசாயத்திற்காக மின்இணைப்பு கேட்டு கடந்த 7 ஆண்டு காலமாக காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கு வரிசையாக முன்னுரிமை அடிப்படையில் மின்இணைப்பு வழங்காமல் தமிழக அரசு தக்கல் முறையை அமுல்படுத்தியுள்ளது காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவருக்கும் உடனடியாக மின்இணைப்பு வழங்கிட வேண்டுமென தி.மு.க விவசாய அணி வற்புறுத்துகிறது.

தீர்மானம் – 11                                           

மத்திய அரசு மத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வு முறை அமுல்படுத்தியுள்ளதால் கிராமப்புறத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் விவசாய குடும்பத்து பிள்ளைகள் மருத்துவ கல்வியில் இருந்து விலக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிகத்திற்கு நீட் தேர்வு முறைக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டுமென வற்புறுத்தி ஜுலை 27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கலி போராட்டத்தை நமது கழகசெயல் தலைவர் அறிவித்துள்ளார் அதில் தி.மு.க விவசாய அணித் தோழர்கள் சிறப்பாக கலந்து கொள்வது என தி.மு.க விவசாய அணி தீர்மானிக்கிறது.

தீர்மானம் – 12                                               

விவசாயிகள் பிரச்சனைகளுக்காக புதுடெல்லியில் நாள் தோறும் தங்கள் உடலை வருத்திக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினருக்கு தி.மு.க.விவசாய அணி ஆதரவையும் – ஆறுதலையும் தெரிவித்து உடனடியாக பாரத பிரதமர் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசவேண்டுமென தி.மு.க விவசாய அணி கேட்டுக்கொள்கிறது

கருத்துகள் இல்லை: