வியாழன், 20 ஜூலை, 2017

BBC :இந்திய-சீன எல்லை முட்டுக்கட்டை நிலை ஏன் முற்றி வருகிறது? Narendra Modi may trigger war with Pakistan to hide failures: Mayawati

They may even get a Hindu Muslim riot triggered" she said. ஒரு மாதமாக இந்திய-சீன எல்லையில் நீடித்து வரும் முட்டுக்கட்டை குறித்த சமீபத்திய தலைப்புச் செய்திகளை நீங்கள் இணையத்தில் உலவிப் பார்த்தால், ஆசியாவின் பரம எதிரி நாடுகள் தங்களுடைய ஆயுதப் போரின் விளிம்பில் இருப்பதாக நினைக்கலாம். இது குறித்து கூறப்படும் சொல்லாடல்கள் முழுவதும் அச்சமூட்டுபவையாகவும், அச்சுறுத்துபவையாகவும் உள்ளன. இந்த முட்டுக்கட்டை, முழுமையான போருக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் என சீனா எச்சரித்துள்ளதாக டெல்லி செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இதே கூற்றை எதிரொலிக்கும் மற்றொரு செய்தி, இந்தியாவை சீனா முறைத்துக் கொண்டு நிற்பதாக கூறுகிறது.
எல்லைப் பிரச்சனையினால் 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா தோல்வியடைந்ததை ,போரின் போது வெளியான பழைய அறிக்கைகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பீஜிங்கிலிருந்து வெளியாகும் சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் நினைவுப்படுத்த துவங்கியுள்ளது.
பூடானின் சாலைத் திட்டத்தில் குறுக்கீடு செய்து,அந்நாட்டின் இறையாண்மையை வலுவிழக்கச் செய்வதாக இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ள 'குளோபல் டைம்ஸ்' செய்தித்தாள், `ஒருவேளை இந்தியா இது போன்ற மோதல் போக்கை தூண்டினால், சீனாவிடமிருந்து கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்` என கூறியுள்ளது.

ஜுன் மாத மத்தியில், இந்தியாவில் டோக்லாம் என்றும், சீனாவில் தொங்லாங் என்று அறியப்படும் பீடபூமி வழியாக எல்லையில் சாலையை விரிவாக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தபோது சமீபத்திய மோதல் தொடங்கியது.


சீனாவுக்கும், வட கிழக்கு இந்திய மாநிலமான சிக்கிம் மற்றும் பூட்டானுக்கு இடையிலான சந்திப்பில் இந்த பீடபூமி உள்ளது. தற்போது சீனாவுக்கும், பூட்டானுக்கும் இடையில் இந்த இடம் சர்ச்சையில் உள்ளது. இந்த இடத்தை பூட்டான் உரிமை கொண்டாடுவதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது.
இந்த சாலை பணிகள் நிறைவுபெற்றுவிட்டால், இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் "கோழியின் கழுத்து" எனப்படும் 20 கிலோமீட்டர் (12 மைல்) நிலப்பரப்பை சீனா எளிதாக சென்றடைய வழிசெய்யும் என்பதால் இந்தியா கவலையடைந்துள்ளது.
இந்திய பெருநிலப்பகுதியின் வட கிழக்கில் அமைந்துள்ள 7 மாநிலங்களை இந்த பகுதிதான் இணைக்கிறது. இந்த முட்டுக்கட்டை நிலை துவங்கியதிலிருந்து ,இரு தரப்பினரும் தங்களது படைகளை குவித்து வருவது மட்டுமின்றி, எதிர் தரப்பினரை பின் வாங்க சொல்லி வருகின்றனர்.
இந்த முட்டுக்கட்டை நிலை நெருக்கடியாக மாறிவரும் விதம் ஏற்கனவே நடந்த சம்பவம் ஒன்றை நினைவுபடுத்தும் பயங்கர உணர்வை தோற்றுவிக்கிறது.
இரு நாட்டுப் படைகளின் சிறு ஊருடுவல்கள் சாதாரணமாக நடக்கக் கூடிய, சரியாக வரையறுக்கப்படாத எல்லைப் பகுதிகளைக் கொண்ட இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே இது போன்ற மோதல்கள் ஏற்படுவது இது முதல் முறையல்ல.
1967-ஆம் ஆண்டு இதே பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கிடையே மோதல் நடைபெற்றுள்ளது மற்றும் 1986-87-ஆம் ஆண்டில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள எல்லைப்பகுதியில் நீண்ட முட்டுக்கட்டை நிலை மற்றும் படைகளைக் குவித்தல் போன்றவை நடைபெற்றுள்ளன.



முற்றுவது ஏன்?
இந்த சமீபத்திய முட்டுக்கட்டை நிலை மூலம், பூடான் விவகாரத்தில் தனது உறுதிப்பாட்டை சீனா சோதித்து பார்க்கிறது என இந்தியா நம்புவதாக நிபுணர் அஜய் சுக்லா கூறுகிறார். `இந்தியா மற்றும் பூடான் நாடுகளுக்கிடையேயான நெருக்கமான உறவை சீனா எப்போதுமே எரிச்சலுடன் பார்த்து வருகிறது. இந்த உறவைப் பிரிக்க சீனா கொடுத்த அழுத்தத்தையும் மீறி இந்த உறவு நீடித்துள்ளது.'
இந்த முறை இந்தியாவிற்கு முன்னரே சீனா பிரச்சனையை பெரிதாக்கியுள்ளது. கடந்த செவ்வாயன்று பீஜிங்கில் சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளரான லு காங்க் செய்தியாளர்களிடம் பேசும் போது, `சூழ்நிலை மேலும் மோசமாகாமல் தவிர்க்க வேண்டுமானால் இந்தியப் படைகள் அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டும்` என தெரிவித்துள்ளார்.
'வெறும் மிரட்டல் அல்ல'
சீனாவின் எச்சரிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது என இந்திய நிபுணர்கள் நம்புகின்றனர். `பொதுவாக, சீனா பலப் பிரயோகம் செய்வதற்கு முன்னர், இது போல போதிய அளவு அறிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகளை விட்டு, களத்தை தயார் செய்துவிட்டுத்தான் நடவடிக்கையில் இறங்கும். எனவே இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது மற்றும் இதனை வெறும் ஒரு மிரட்டலாக கருதக் கூடாது.` என சீன நிபுணர் ஒருவர் கூறினார்.
1962-ஆம் ஆண்டு, சீன அரசு செய்தி முகமையான ஷின்ஹுவா, போரை தவிர்க்கும் வகையில் இந்தியா பின் வாங்க வேண்டும் என முன் கூட்டியே எச்சரித்திருந்தது. 1950-ஆம் ஆண்டு நடைபெற்ற கொரியப் போரின் போது, இந்தியா வழியாக அமெரிக்காவை எச்சரித்த சீனா, யாலு நதியை அமெரிக்கா தாண்டினால் தாங்களும் போரில் பங்கெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என தெரிவித்திருந்தது.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சீனா போரை விரும்புவதாக அர்த்தமில்லை. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலை காரணமாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வெளியிடுவது வழக்கமான ஒன்று.
2012-ஆம் ஆண்டு பூட்டான் மற்றும் மியான்மருடனான மும்முனை எல்லையை, அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இறுதியாக சீனா மற்றும் இந்தியா ஒப்புக் கொண்டன. அதுவரை தற்போது இருக்கும் நிலைமை நிலவும்.
சாலை அமைப்பதன் மூலம் சீனா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இந்தியா நம்புகிறது.இந்தியாவின் நெருக்கமான கூட்டாளியான பூடான், உதவி கேட்ட பின்னர்தான் அந்த பகுதியில் சீனப் படைகளுக்கு எதிராக தனது படைகளை இந்தியா அனுப்பி வைத்தது.
பூட்டானுக்கு உதவுவதற்காக டோக்லாம்/டோங்லாங் பகுதியில் இந்தியப் படைகள் குவிக்கப்படுவது சர்வதேச விதிகளை மீறிய செயல் என சீனா கூறுகிறது.`தங்களுடைய அரசியல் குறிக்கோளை அடைவதற்காக இது போன்ற விதிமீறல்களில் இந்தியா ஈடுபடக் கூடாது.` என லூ கூறுகிறார்.

ஆனால் ஒரு சாலை அமைக்கப்படும் விஷயத்தை ஏதோ `` இந்தியாவுக்குப் பாரிய பாதுகாப்பு பிரச்சனை`` என்று வெளிப்படையாக பெரிதாக்கியதன் மூலம் இந்தியா சாத்தியக்கூறான அளவில் ஒரு தவறைச் செய்துவிட்டதாக சில பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.
`பாதுகாப்பு குறித்த சில அக்கறைகள் உள்ளதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இது குறித்து வலுவாக குரல் கொடுத்தது தவறானது. ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டது என்று நாம் கூற முடியும். ஆனால் பாதுகாப்பு கண்ணோட்டத்திற்கு அதீத முக்கியத்துவம் அளித்து பார்த்தால், அதனை சீனா பயன்படுத்திக் கொள்கிறது.` என ஒரு நிபுணர் என்னிடம் தெரிவித்தார்.



சவாலான சூழ்நிலை
அவரிடம் சொல்வதில் ஒரு விஷயம் உள்ளது.
டோக்லாம்/டோங்லாங் பகுதியில் சாலை அமைக்கும் சீனப் படைகளை தடுத்து நிறுத்த இந்திய ராணுவம் பயன்படுத்திய அதே வாதத்தைப் பயன்படுத்தி, சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீரில் பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று ஒரு மூன்றாம் நாடு நுழையலாம் என்கிறார் சீன ஆய்வுக் கழகம் ஒன்றில் பகுப்பாய்வளாராகப் பணியாற்றும் லாங் ஷிங்ச்சுன்.
ஒருவேளை பூடானின் பகுதியை பாதுகாக்க இந்தியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டால், அதனை ஏற்கனவே நிறுவப்பட்ட பகுதியில்தான் செயல்படுத்த முடியுமே தவிர, சர்ச்சைக்குரிய பகுதியில் அல்ல.`என லாங் ஜிங்சுன் தெரிவிக்கிறார்.
இந்த முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவர,எந்த தரப்பிற்கும் கௌரவக்குறைவு ஏற்படாத, மூன்று தரப்பினரும் ஒப்புக் கொள்ளக் கூடிய தீர்வு எடுக்கப்பட வேண்டும். சீனா தன்னுடைய நிலையில் கடுமையாக்கும் நிலையில், இந்த தீர்வு பிரச்சனைக்குரியதாகவும், அதிக காலம் பிடிப்பதாக இருக்கும் என பலர் நம்புகின்றனர். கடந்த பல ஆண்டுகளை விட, தற்போது இரு நாடுகளுக்கிடையேயான உறவு மோசமாக இருக்கிறது.
  • தலாய் லாமா வருகை சர்ச்சை- அருணாசல பிரதேசத்தின் 6 மாவட்டப்பெயர்களை மாற்றியது சீனா
இரு தரப்பும் இந்த பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ள சுமூகமான சூழலாக கருதப்பட்ட, ஹம்பர்க்கில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் சீன பிரதமர் ஜி ஜிங்பிங் மற்றும் மோடியின் சந்திப்பு நடக்கவில்லை.
சீன பிரதமரை சந்திக்கும் நிகழ்வு, மோடியின் செயல் திட்டத்தில் இல்லை என இந்தியா தெரிவித்தது.
அதே சமயம் இரு பிரதமர்களுக்கும் இடையே சந்திப்பு நிகழ்வதற்கான சூழல் ஹம்பர்க்கில் இல்லை என சீனா தெரிவித்தது.


Image caption ஹம்பர்க்கில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகிறது. இந்த மாத இறுதியில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான சந்திப்பில் கலந்து கொள்ள இந்தியாவின் செல்வாக்கு மிக்க தேசியப் பாதுகாப்புத் துறை ஆலோசகரான அஜித் தோவல், பீஜிங் செல்ல இருக்கிறார்.
இந்தியா-சீனா எல்லைக்கான சிறப்பு பிரதிநிதியான தோவல், சீன அதிகாரியான யாங் ஜிசியை சந்திக்க உள்ளார்.
`இருதரப்புமே இந்த பிரச்சனையை தங்களின் கெளரவ பிரச்சனையாக பார்க்கின்றன. ஆனால் கடுமையான சூழ்நிலையிலும், இந்த பிரச்சனையை மோசமான நிலைக்கு கொண்டு செல்லாமல் தடுப்பதில்தான் ராஜதந்திரம் அடங்கியிருக்கிறது.`` என்று கூறுகிறார் ஒரு முன்னாள் ராஜீய அதிகாரி.
இரு நாட்டு உறவுகளும் மோசமான நிலையில் இருந்தாலும், போர் வெடிக்க வாய்ப்பில்லை.
`ஆயுதப் போரை இரு தரப்புமே விரும்புவதாக நான் நினைக்கவில்லை. யாருக்கும் போரில் ஆர்வம் இல்லை. சண்டை மூளும் அளவிற்கு அந்த சர்ச்சைக்குரிய பகுதியில் ஒன்றும் இல்லை. ஆனால் இரு தரப்பும் தங்களுடைய மரியாதையை நிலைநாட்ட விரும்பும் இந்த நிலை நீண்ட கால முட்டுக்கட்டைக்கு இட்டுச் செல்லும்`, என டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும், சிந்தனைக் குழுவைச் சேர்ந்தவருமான ஸ்ரீநாத் ராகவன் பிபிசியிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: