வியாழன், 20 ஜூலை, 2017

கமல்ஹாசனை விமர்சிக்கும் அருகதை குதிரை பேர அரசுக்கு இல்லை: ஸ்டாலின் பேட்டி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (20-07-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : ஸ்டாலின்: இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக, நீட் தேர்வில் தமிழகத்துக்கு உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதை மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டிக்காட்டி வலியுறுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்வரும் 27 ஆம் தேதி, மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்த தீர்மானித்து இருக்கிறோம். குறிப்பாக, இரு தினங்களுக்கு முன்பு நான் சட்டமன்றத்தில் பேசியபோது, ”இந்திய ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபோதே இப்பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து மாநில அரசு அதற்கான செயல் வடிவத்தை உருவாக்கி இருக்க வேண்டும்.

 இப்போதும் ஒன்றும் குடிமுழுகிப் போய் விடவில்லை, விரைவில் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது, எனவே, இந்தத் தேர்தலையாவது பயன்படுத்தி, ஆளுகின்ற அதிமுக ஆட்சி நிபந்தனை விதித்து, நீட் தேர்வுக்கு விதிவிலக்கினைப் பெற்றுத் தரும் சூழலை ஏற்படுத்த வேண்டும்”, என்று தெரிவித்தேன். எனவே, இதை சுட்டிக்காட்டும் வகையில், வரும் 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்துவதென முடிவு செய்திருக்கிறோம்.
அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்களின் தலைமையில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் திமுக மட்டுமல்ல, தோழமைக் கட்சிகளைச் சார்ந்தவர்களும், அதேபோல, எங்களுடைய போராட்டத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகளும், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.

செய்தியாளர்: முரசொலி பவளவிழாவிற்கு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருகிறது. அவர்கள் பங்கேற்பார்களா? வேறு யாரெல்லாம் பங்கேற்கவிருக்கிறார்கள்?
ஸ்டாலின்: முரசொலி பவள விழா ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பது முடிவு செய்யப்பட்டு, அழைப்பிதழ் உங்களுக்கு முறைப்படி வழங்கப்படும். அப்போது யார், யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரிய வரும். செய்தியாளர்: நீட் தேர்வுக்கு விலக்களிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பாக அமைச்சர்கள், மத்திய அமைச்சரை சந்திப்பதற்காக இப்போது சென்றிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? ஸ்டாலின்: சென்று, வென்று வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. ஏற்கனவே இருப்பது போல மத்திய அரசுக்கு அடிபணிந்து, மண்டியிட்டு இருக்கக்கூடிய சூழ்நிலை தொடர்ந்தால் அது வேதனை.

செய்தியாளர்: நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையை அமைச்சர்கள் விமர்சனம் செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஸ்டாலின்: விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு ‘குதிரை பேர’ அதிமுக ஆட்சி இருக்கிறது. இந்த ஊழல் அரசுக்கு கமல்ஹாசன் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. செய்தியாளர்: ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன? ஸ்டாலின் : சட்டப்படி உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கக்கூடிய ஒரு நபருக்கு இப்படி நினைவு மண்டபம் கட்டுவது என்பது முறைதானா என்பதை பொறுப்பில் இருப்பவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: