புதன், 19 ஜூலை, 2017

கர்நாடகா தனிநாடா? தனி கொடியை வடிவமைக்க குழு

மின்னம்பலம் : கர்நாடக மாநிலத்துக்கென்று புதிய கொடி ஒன்றை உருவாக்குவது குறித்து ஆராய்வதற்காக அம்மாநில முதல்வர் சித்தராமையா, ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு அப்போதைய பாஜக ஆட்சி காலத்தில், கர்நாடக மாநிலத்துக்கென மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தைக் கொண்ட தனிக்கொடியை உருவாக்க வேண்டுமென அம்மாநிலத்தில் பரவலாக கோரிக்கை எழுந்தது. ஆனால், இந்த கோரிக்கையை அப்போதைய பாஜக அரசு நிராகரித்துவிட்டது. மேலும், ‘மாநிலத்துக்கென பிரத்யேகமான கொடி உருவாக்குதல் நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது’ என்று உயர் நீதிமன்றத்திலும் தெரிவித்தது.
இந்த நிலையில் நேற்று ஜூலை 18ஆம் தேதி கர்நாடக மாநிலத்துக்கென தனியாக ஒரு கொடியை உருவாக்க, அம்மாநில கலாசாரத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகள், கல்வியாளர்கள் என ஒன்பது பேர் அடங்கிய குழுவைக் கர்நாடக அரசு அமைத்துள்ளது.
அவர்கள், ‘மாநிலத்துக்கென்று தனிக்கொடி அமைப்பதில் ஏதேனும் சட்ட சிக்கல்கள் உள்ளதா, அரசியலமைப்பு சட்டம் அதை தடை செய்கிறதா?’ என்பது குறித்த ஆய்வு செய்வதற்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டம் 370ஆவது பிரிவின்படி, காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் தனிக்கொடி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கென்று தனியாக ஒரு தேசியக் கொடி இருக்கும்போது, கர்நாடகாவில் தனியாக ஒரு கொடியை வடிவமைக்க குழு அமைத்திருப்பது, கர்நாடகம் தனி நாடா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை: