வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

ஜெயலலிதாவின் ஆவியை பாட்டிலில் அடைத்து சமுத்திரத்தில் .. ஜெ. ஆவி ஹிட் லிஸ்ட்டில் 27 பேர்! அடேய் அடேய்...

விகடன் :”அவர் கண்களை மூடியபடி, வேகமாக மந்திரங்களை ஜெபித்தபடி பிரசன்ன சோழிகளை உருட்டிவிட்டார். நேரம் ஆக ஆக மந்திர உச்சாடனம் வேகம் பெற்றது. அரை மணி நேரம் ஓடியிருக்கும். கண்களைத் திறந்தார். ‘‘ஜெயலலிதாவின் ஆவியை அழைத்து, நடப்புத் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாகப் பேசினேன்’’ என்றார்.

ஸ்ரீவேங்கட சர்மா... பிரசன்ன மந்திர ஜோதிடர். பூர்வீகம், பாலக்காடு. கோவை சிங்கநல்லூரில் தற்போது வசிக்கிறார். கடந்த 16 வருடங்களாக ஸ்ரீமஹாபிரத்யங்கரா தவப் பீடத்தை நடத்தி வருகிறார். ஏற்கெனவே ஒருமுறை, சென்னையில் பிரேத அலைகள் (ஆவிகள்) எங்கெங்கே அலைகின்றன என்பதைக் காட்டுவதற்காக ஆந்தையாருடன் ராத்திரி ரவுண்ட்-அப் சென்ற அதே தாடிக்காரர். அவரிடம் பேசினோம்.
“ஜெயலலிதாவுக்காக ஏற்கெனவே ஒரு பூஜை நடத்தினீர்களே?”

“ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எனது குருநாதர், சில மந்திர ஜெபங்களை அவருக்காக திருவண்ணாமலையிலிருந்து துவக்கி நடத்தச்சொன்னார். பிறகு, அந்த மந்திரப் பலன்களை நேரடியாக ஜெயலலிதாவிடம் போய்த் தரச் சொன்னார். அதற்காக போயஸ் கார்டன் சென்றேன். சங்கரலிங்கம் என்கிறவரிடம் தந்துவிட்டுப்போகச் சொன்னார்கள்.
பிறகு, துக்ளக் ஆசிரியர் சோ மூலம் மீண்டும் முயன்றேன். இந்த முறை, ‘சசிகலாவைச் சந்தித்தபிறகுதான் ஜெயலலிதாவைச் சந்திக்கமுடியும்’ என்றார்கள். அதற்கு எனது குருநாதர் சம்மதிக்கவில்லை. தலைமைச் செயலக வாசலில் உள்ள நாககன்னி அம்மனை ஜெயலலிதா வணங்குவார் என்று கேள்விப்பட்டு, அந்தத் தெய்வத்திடம் அந்த மந்திரப் பலன்களைச் சமர்ப்பித்து, ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கும்படி சொல்லிவிட்டு ஊர் வந்து சேர்ந்தேன்.” 

“ஜெயலலிதா ஆவியிடம் என்ன கேட்டீர்கள்?”

“ஜெயலலிதாவின் ஆவி என்னுடன் சகஜமாக உரையாடியது. மிகவும் கோபமாக இருந்தார். ‘சிலருக்கு அதிகப்படியான இடம் கொடுத்தது நீங்கள்தானே? 75 நாள்கள் ஆஸ்பத்திரியில் கஷ்டப்பட்டீர்களே?’ என்று கேட்டபோது, ‘நான் வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பிவிட்டேன். கட்சியில் பிரிந்து நிற்பவர்கள் அடுத்த சில நாட்களில் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள். நான் அமைத்த இந்த ஆட்சியைக் கெடுக்க நினைப்பவர்களைச் சும்மா விடமாட்டேன். எனது முதலாம் ஆண்டு நினைவு தினம் வருவதற்கு முன்பே, இருந்த இடம் தெரியாமல் அழிந்து போவார்கள்’ என்றார். அவரின் வாக்குப்படி, ஹிட் லிஸ்ட்டில் 27 பேர் இருக்கிறார்கள். யார் யார் என்கிற பெயர் விவரங்களைச் சொல்லவில்லை. திடீர் திடீரென துர் மரணங்கள் கணப் பொழுதில் நடக்கும். அந்தச் சந்தர்ப்பங்களில், ஜெயலலிதாவின் ஆவி எவ்வளவு பலமாக உலா வருகிறது என்பது தமிழக மக்களுக்குத் தானாகப் புரியும்!”

“சரி... ஜெயலலிதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது?”

“ஸ்தல பிரசன்னம், ஸ்தல நிருபன பிரசன்னம், உபாய அங்கப் பிரசன்னம், அங்கப் பிரசன்னம்... இந்த நான்கை உட்படுத்தியதில் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல.”

‘‘அப்படி என்றால்..?’’

‘‘எனது தேவப் பிரசன்னத்தில் ஆகாய தத்துவ லக்ன நேரத்தின்படி மேலே இருந்து கீழே விழுந்திருக்கிறார்.’’

“எடப்பாடி நிர்வாகத்தை எப்படிப் பார்க்கிறார்?”

“ஜெயலலிதாவின் படத்தை வணங்கிவிட்டுத்தான், அவர் தினமும் பணியைத் தொடங்குகிறாராம். இன்றைய சூழலில் ஜெயலலிதாவின் ஆசீர்வாதம் எடப்பாடிக்கு இருக்கிறது.”

“பன்னீர்செல்வம்?”

“இவர் பிரிந்து சென்றது ஜெயலலிதாவின் ஆவிக்குப் பிடிக்கவில்லை. எப்படியும் சேர்ந்துவிடுவார். தமிழக அரசியலிலும் சரி...

அ.தி.மு.க என்கிற கட்சியிலும் சரி... இவர் முக்கிய பங்கு வகிப்பார்.”

“சசிகலா?’’

“ஜெயலலிதாவிடம் ஆரம்ப காலத்தில் ரொம்ப நல்லவராகத்தான் ஆரம்பித்தார். இவரின் தியாகங்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. நாள் ஆக.. ஆக.. விசுவாச நிலைப்பாட்டிலிருந்து விலகிவிட்டார். இதையெல்லாம் ஜெயலலிதா ஆவி விரும்பவில்லை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகான அவரின் அரசியல் நடவடிக்கைகளுக்காகக் கண்டிப்பாகத் தகுந்த தண்டனையை அனுபவிப்பார்.”

“ஜெயலலிதாவின் ஆவியைச் சாந்தப்படுத்த முடியாதா? அவரின் கோபத்துக்கு உள்ளான  27 பேர் சும்மா இருப்பார்களா? மந்திரவாதிகளைத் தேடிப்போய் ஆவியை அடக்க மாட்டார்களா?”

“ஜெயலலிதாவின் ஆவியை வயப்படுத்தி, செயல் இழக்க வைக்கும் சில ஆன்மிக முறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் ஜெயலலிதாவுக்கு எதிரானவர்கள் செய்ய முயற்சி எடுக்கிறார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே கோடிக்கணக்கில் மந்திரங்கள், லட்சக்கணக்கில் அபிஷேகங்கள், ஆயிரக்கணக்கில் யாகங்கள் என்று அவர் செய்த பிரார்த்தனைகள் எல்லாம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளன. அவரைக் காக்கும் மந்திர மலையாக அவை நிற்கின்றன. அவரது ஆவி தெய்வீக நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ‘ரண கோலகல சம்பத் கிரி’ என்கிற தெய்வத்தின் பாதையில் ஜெயலலிதா தற்போது இருக்கிறார். சித்தர்களில் பலர் அவருக்கு ஆதரவாக தற்போது நடமாடுகிறார்கள். போகரும், பாம்பாட்டி சித்தரும்தான் விலகிப்போகிறார்கள். அதனால், அவரது ஆவியை அடக்குவது சுலபம் இல்லை. அதுமட்டுமல்ல... ஜெயலலிதாவின் ஆவியும் குறிப்பிட்ட காலம் வரைதான் பூமியில் உலா வர முடியும்.    எம்.ஜி.ஆரின் ஆவியைச் சந்திக்க ஜெயலலிதாவின் ஆவி முயற்சி செய்துகொண்டிருக்கிறது. அதற்காக அவர் மேலுலகம் போயே தீருவார். அதற்கு முன்பு... அதாவது, வருகிற டிசம்பர் 5-ம் தேதிக்குள் இங்கே மாற்றங்களை உண்டாக்கிவிட்டுத்தான் செல்வார்.”
“ஜெயலலிதா உடலை அடக்கம் செய்தபோது, முறைப்படி செய்யவில்லை என்கிறார்களே... அதனால் அவரின் ஆவி மேலுலகம் போகாமல் இங்கே உலா வருகிறதா?’’

“இறுதிச் சடங்கு செய்தபோது, அங்கே இருந்த சிலரின் நிலைமையெல்லாம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். முக்கியமான பிரமுகர் ஒருவர், இரண்டு முறை கீழே விழுந்து காயப்பட்டார். இது தெரியுமா? அது மட்டுமல்ல... ஜெயலலிதாவின் சமாதிக்குப் போனபோது, காவல் பணிக்கு வருகிற சிலர் இரவு நேரங்களில் அலறியபடி ஓடுவதாகக் கேள்விப்பட்டேன். இரண்டு பேர் விபத்தில் சிக்கிக் காலை உடைத்துக்கொண்டனர். எதிர்மறையான எண்ணத்துடன் ஜெயலலிதா சமாதிக்கோ, அவர் வசித்த போயஸ் கார்டனுக்கோ யார் சென்றாலும் இதே கதிதான்.’’

“அப்படியென்றால், போயஸ் கார்டனுக்குள் ஜெயலலிதாவின் ஆவி உலா வருகிறதா?’’

“தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் (அதிகாலை 3.30 - 4.30) ஜெயலலிதாவின் ஆவி போயஸ் கார்டனுக்குள் உலா வருகிறது. அதிகாரப் போதையுடன் வலம் வந்தவர்கள், வீட்டை ஆட்சி செய்தவர்கள்... யாரும் போயஸ் கார்டனுக்குள் போக முடியாது. ஜெயலலிதாவின் ரத்த சம்பந்தங்கள்கூட போக முடியாது. அவரை வைத்து சம்பாதித்தவர்கள் வைத்திருக்கும் பணம், சொத்து... இதையெல்லாம் அவர்களால் அனுபவிக்க முடியாது. ஜெயலலிதாவின் சொத்துகளை யாரும் சுருட்ட முடியாது’’ என்றவர், மீண்டும் கண்களை மூடினார். சில நிமிடங்களுக்குப் பிறகு விழித்தார்.

“திருச்சி அருகில் ஒரு வி.ஐ.பி இறந்துபோனார். அவரது ஆவியை பாட்டிலில் அடைத்து, குமரிக் கடலில் மிதக்கவிட்டார்கள் அவரின் எதிரிகள். அது இன்னும் அங்கேதான் மிதக்கிறது. அதைப்போல, ஜெயலலிதாவின் ஆவியை பாட்டிலில் அடைத்து சமுத்திரத்தில் போட தொடர்ந்து முயற்சி நடக்கிறது. கேரளாவில் இருந்து 72 மந்திரவாதிகளை அழைத்துவந்து யாகம் நடத்தினார்கள். ஆனால், அது முழுமையாக நடக்கவில்லை. யாகத்தில் கலந்துகொண்டவர்களில் ஆறு பேருக்குத் தீக்காயம் ஏற்பட்டது. அவர்களில் இருவர் இப்போது எங்கே என்று தெரியவில்லை. குறுக்குவழியில் முயற்சி செய்யும் ஜெயலலிதாவின் எதிரிகளை அவரது ஆவி வீழ்த்திவிடும்.”

- கனிஷ்கா, படம்: பா.காளிமுத்து, ஓவியம்: கோ.ராமமூர்த்தி

கருத்துகள் இல்லை: