ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

ராமஜெயம் கொலை வழக்கு: கைதிகளிடம் விசாரணை! முக்கிய திருப்பம்?

தமிழகத்தையே உலுக்கி, போலீஸாரை ஐந்து வருடங்களுக்கும் மேலாக குழப்பிக்கொண்டிருக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, நேற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி திருச்சி மத்தியச் சிறையில் இருக்கும் கைதிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
திமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திருச்சி கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் வருடம் மார்ச் 29ஆம் தேதி காலை வாக்கிங் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பதைபதைப்போடு தேடிக்கொண்டிருந்த நிலையில், மறுநாள் கல்லணை சாலையில் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் பிணமாகக் கிடந்தார் ராமஜெயம்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸார் இந்தக் கொலை தொடர்பாக இதுவரை ஆயிரம் பேருக்கும் மேல் விசாரணை நடத்தியும் அவர்களால் வழக்கில் ஒரு முனையளவும் முன்னேற முடியவில்லை. இந்த நிலையில் தன் கணவர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்து அது நிலுவையில் இருக்கிறது.

இதற்கிடையில் நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, ‘ராமஜெயம் கொலை வழக்கு என்னாயிற்று?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இந்த வழக்கு குறித்து குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குநர் திருச்சி சென்று, புலன் விசாரணை பற்றி ஆய்வு செய்து அறிவுரைகள் கொடுத்துள்ளார். குற்றப்புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் ஒருவரின் நேரடி மேற்பார்வையில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்தவரின் உறவினர்கள், அவருடைய பணியாட்கள், அவருடன் தொழில்ரீதியாக அறிமுகம் உள்ளவர்கள், அரசியல் தொடர்பு உடையவர்கள் என இதுவரை மொத்தம் 1,100 சாட்சிகளுக்கு மேல் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிரமாகச் சோதனை நடத்தி தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டது. வழக்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சம்பவங்கள் சிசிடிவி பதிவுகள் மூலம் பார்வையிடப்பட்டன. இறந்தவரை வாகனத்தில் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் திருச்சியை ஒட்டி உள்ள சுங்கச்சாவடிகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. சந்தேகப்படக்கூடிய வகையான 294 வாகனங்கள் சோதனைச் செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 2,910 கைபேசி எண்கள் பட்டியலிடப்பட்டு அவற்றைப் பயன்படுத்துவோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் இறந்து போன நபருடன் நெருங்கிய தொடர்புகொண்ட மூன்று நபர்கள் தங்களது வாக்குமூலங்களில் முரண்பாடான தகவல்களைத் தெரிவித்ததால், அவர்களுள் இருவர் சென்னை, சாஸ்திரி பவனில் உள்ள தடய அறிவியல் உளவியல்துறையில் உண்மை அறியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மற்றொருவர், அப்பரிசோதனைக்கு மறுத்ததால், அவர் அப்பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. இவ்வழக்கைப் பொறுத்தவரையில் கடத்தப்பட்டதற்கும், கொலை செய்ததற்கும் நேரடி சாட்சிகள் எதுவுமில்லை. இறந்து போன நபருக்கு தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்விலும் பலவழிகளில் விரோதங்கள் இருந்துள்ளன. இதுபற்றிய விவரங்கள் அறிந்து ராமஜெயத்துக்கு நெருக்கமானவர்கள் அளித்துள்ள தகவல்களின் பேரிலேயே விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்கள் மேலும் ஒத்துழைப்புத் தந்து விவரங்கள் அளித்தால் அவை அனைத்தும் விசாரணை செய்யப்படும்” என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை திடீரென ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீஸார் எட்டு பேர் திருச்சி மத்தியச் சிறைக்குச் சென்றனர். அங்கு சிறை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று அவர்கள் சிறை கைதிகள் சிலரை விசாரித்ததாகத் தெரிகிறது.
இதுபற்றி திருச்சி சி.பி.சி.ஐ.டி-யின் டி.எஸ்.பி. கிருஷ்ணன், “நாங்களும் தொடர்ந்து விசாரணை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தக் கொலை வழக்கு பற்றி விவரம் தெரிந்த பொதுமக்கள் தகவல் அளித்தால்தான் வழக்கு முடிவுக்கு வரும்” என்று குறிப்பிட்டுள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: