புதன், 20 செப்டம்பர், 2017

மெக்சிகோ நிலநடுக்கம்: 149 பேர் உயிரழப்பு !

மெக்சிகோவில் நிலநடுக்கம்: 149 பேர் பலி!மின்னம்பலம் : மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 149 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெக்சிகோவின் பியூப்லா நகரில் செவ்வாயன்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.15 மணிக்குச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.1ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாகக் கட்டிடங்கள், பாலங்கள் போன்றவை நொறுங்கி விழுந்தன. இதனால் மக்கள் அலறியடித்தபடி வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறினர். பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மெக்சிகோவின் தேசிய சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் லூயிஸ் பிலிப் ட்விட்டரில் கூறியுள்ளதாவது, நிலநடுக்கம் காரணமாக மோர்லொஸ் பகுதியில் 55 பேரும், மெக்சிகோ நகரில் 49 பேரும், பியூப்லா நகரில் 32 பேரும் குய்ரேரோவில் 3 பேரும் மெக்சிகோவில் 10 பேரும் பலியாகியுள்ளனர் என்று பதிவிட்டுள்ளார். மொத்தம் 149 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக 38 லட்சம் பேர் மின்சாரம் இன்றி இருளில் தவிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நொறுங்கி விழுந்த பள்ளி ஒன்றில் இருந்து 22 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் 38 பேரைக் காணவில்லை என்றும் மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நெட்டோ தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மெக்சிகோ நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மெக்சிகோவில் கடந்த 1985ம் ஆண்டு இதே நாளில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகினர். அவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்துவதற்கான நினைவு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், அதே நாளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்.7ம் தேதி தெற்கு மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 98 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: