வியாழன், 21 செப்டம்பர், 2017

போலீசார் அலட்சியத்தால் கூலி தொழிலாளி தற்கொலை

kathir.vincentraj: போலீசார் அலட்சியத்தால் கூலி தொழிலாளி தற்கொலை
தன் தற்கொலைக்கு போலீசார் தான் காரணம் என்று நீதிமன்ற நடுவரிடம் வாக்குமூலம்
உண்மையை மறைத்து மனைவியை குற்றவாளி ஆக்கி சிறையில் தள்ளிய போலீஸ்
பத்திரிக்கைச் செய்தி
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் வசித்து வந்தவர் அன்பு (42). தலித் சமூகத்தைச் சேர்ந்த அன்பு கடந்த 08.09.2017 அன்று வாணியம்பாடி நகர் காவல்நிலையத்திற்கு முன்பு தன்னுடைய உடலில் தீ வைத்து ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வந்தவர் 11.09.2017 அன்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். வாணியம்பாடி நகர் போலீசாரின் அலட்சியத்தினால் தன் மீது தீ வைத்து கொண்ட அன்பு நடந்த உண்மையை மாவட்ட முதன்மை உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் தந்திரமாக அன்புவின் தற்கொலைக்கு அவரது மனைவி நளினி தான் காரணம் என்று கூறி பொய்யாக வழக்கினை பதிவு செய்து நளினியை சிறையில் அடைத்துள்ளனர். இரண்டு நாட்கள் காவல்நிலையத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த நளினி, தனது கணவர் இறப்பு சடங்கிற்கு சென்று வர ஒரு மணி நேரம் அனுமதி கொடுங்கள் என்று கெஞ்சியும் போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஒரு தற்கொலைக்கு காரணமான போலீசார் இத்தகைய கொடூரமான அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதுகுறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கை செய்தி வெளியிடப்படுகிறது.
வாணியம்பாடியில் வசித்து வந்த அன்பு தனியார் விடுதி ஒன்றில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தவர். இவரது மனைவி நளினி. இருவருக்கும் இடையே கடந்த 2 மாதமாக தகராறு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து வாணியம்பாடி நகர் காவல்நிலையம் சென்று அன்பு புகார் கொடுத்துள்ளார். போலீசார் புகாரினை பதிவு செய்யாமல் அலைக்கழித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 08.09.2017 அன்று மாலை சுமார் 6.45 மணியளவில் வாணியம்பாடி காவல்நிலையத்திற்கு சென்ற அன்பு அங்கிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்களிடம், நான் பலமுறை உங்களிடம் புகார் கொடுத்துவிட்டேன். நீங்கள் புகாரை பதிவு செய்ய மறுக்கிறீர்கள் என்று கூற, அதற்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் குமார், காவல்நிலையத்தைவிட்டு வெளியே போடா என்று கடுமையாக பேசியிருக்கிறார்.
இதனால் மனமுடைந்த அன்பு அன்று இரவு 7.30 மணியளவில் காவல்நிலையத்திற்கு முன்பு தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். ஆபத்தான நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அன்பு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு மாவட்ட முதன்மை உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் திருமிகு.சக்திவேல் அவர்கள் இரவு சுமார் 9.50 மணியளவில் அன்புவிடம் வாக்குமூலம் பெற்றிருக்கிறார். அந்த வாக்குமூலத்தில், என் மனைவி மீது நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் தெரிவித்தேன். அவர்கள் என்னை வெளியே போடா என்று கூறிவிட்டார்கள். இதனால் பாதிப்படைந்த நான் நீதி வேண்டும் என்று கூறி என் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டேன். போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்று தீ வைத்து கொளுத்தியிருக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
வாக்குமூலம் வாங்கிய உடனே மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அன்பு மாற்றப்பட்டிருக்கிறார். இந்நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வந்த அன்பு 11.09.2017 அன்று காலை 6.00 மணியளவில் இறந்து போயிருக்கிறார். வாணியம்பாடி நகர் போலீசார் 11.09.2017 அன்றே மதியம் 12.30 மணியளவில் அன்புவின் மனைவி நளினியை காவல்நிலையத்திற்கு அழைத்து சட்டத்திற்கு விரோதமாக அடைத்து வைத்துள்ளனர். தன்னுடைய கணவர் உடலை பார்க்க ஒரு மணி நேரம் அனுமதி கொடுங்கள் என்று கெஞ்சி அழுதும் போலீசார் அனுமதிக்கவில்லை. நளினியை விட்டிருந்தால் தங்களால் தான் அன்பு இறந்து போயிருக்கிறார் என்கிற உண்மை தெரிந்துவிடும் என்பதற்காக போலீசார் தந்திரமாக நளினியை காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருக்கின்றனர். இரண்டு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நளினி 13.09.2017 அன்று ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அன்புவின் தாயார் பேபியிடம் நளினிக்கு எதிராக ஒரு வாக்குமூலத்தை எழுதி வாங்கி பேபியை மிரட்டி போலீசார் கையெழுத்திட வைத்துள்ளார். தற்போது பேபி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.
பேபியிடம் போலீசார் வாங்கிய வாக்குமூலத்தில், அன்பு காவல்நிலையம் சென்று புகார் கொடுத்த விபரமே பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற நடுவரிடம் தன்னுடைய தற்கொலைக்கு போலீசார் தான் காரணம் என்று அன்பு வாக்குமூலம் கொடுத்திருப்பதனால் இவற்றை ஆதரமாக கொண்டு வாணியம்பாடி நகர் காவல்நிலைய போலீசார் மீது தமிழக காவல்துறை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தற்கொலையின் குற்றவாளியாக இருக்கக்கூடிய போலீசார் இறந்து போன அன்புவின் மனைவியை குற்றவாளியாக காட்டி இறப்பு சடங்கில் கூட பங்கு பெறவிடாமல் தடுத்த இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது.
பரிந்துரைகள்
• வாணியம்பாடி நகர் காவல்நிலைய போலீசார் மீது 306 இ.த.ச. மற்றும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவு 3(2)(va) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
• சம்பந்தப்பட்ட போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட வேண்டும்.
• நளினி உடனடியாக விடுவிக்கப்பட்டு ரூ.25 இலட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். நளினிக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்.
• உண்மையை மறைத்தது, போலியாக ஆவணங்கள் தயாரித்தது போன்ற குற்றத்தில் ஈடுபட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
(A.கதிர்)
செயல் இயக்குனர்

கருத்துகள் இல்லை: