வெள்ளி, 22 செப்டம்பர், 2017

உயர்நீதிமன்றம் : கீழடி ஆய்வு நடத்த 2 வாரங்களில் அனுமதி அளிக்கவேண்டும் . வழக்கறிஞர் கனிமொழி தொடர்ந்த வழக்கில் தொல்துறைக்கு உத்தரவு

கீழடி: மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவு!
மின்னம்பலம் : கீழடியில் நான்காம் கட்ட ஆய்வு நடத்த 2 வாரத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்துக்குட்ட பகுதியில் உள்ளது கீழடி கிராமம். இங்கு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2013-14ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில் இப்பகுதி அகழாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி, 2015 மார்ச் மாதம் முதல் கீழடியில் அகழாய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 கட்ட ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், தற்போது நடந்துவரும் 3ம் ஆட்ட ஆய்வுப் பணிகள் செப்.30ம் தேதி நிறைவடைவுள்ளது.
இந்த அகழாய்வில் பல்வேறு கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. இவற்றில் 1500-க்கும் மேற்பட்டவை மணிகளாகவே உள்ளன. தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பின் உடைந்த பகுதி, விளையாட்டுக் காய்கள், காதணி, செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்றவை கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய 14 பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
அவற்றில் ஒளியன் என்ற முழுப் பெயரும், தனிநபர்களின் பெயர்களில் ஓரிரு எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. சதுரம் மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த செப்புகாசுகள், தங்கப் பொருள்கள், சில மண் உருவங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கு நெசவு தொழில் மிகச் சிறப்பாக நடைபெற்றது என்றும் பெரிய அளவில் சாயப்பட்டறை இருந்ததையும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அகழ்வாய்பு பணியை மத்திய அரசு தாமதப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, ஆய்வின் தலைவர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு ஸ்ரீராமன் நியமிக்கப்பட்ட பின் ஆய்வில் தோய்வு ஏற்பட்டுள்ளதாகப் அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உட்படப் பல தரப்பினரும் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் கனிமொழிமதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஸ்குமார் ஆகியோர் கடந்த 19ம் தேதி கீழடிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று (செப்.22 ) நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், கீழடியில் 4ம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ள யாரேனும் ஒருவருக்கு மத்திய தொல்லியல் துறை 2 வாரங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அகழாய்வு பணியில் தமிழக அரசும் இணைந்து செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழ் உள்ளிட்ட மொழிகளின் தொடக்க கால எழுத்து வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரப்பரளவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக வழக்கறிஞர் கனிமொழிமதியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘கீழடி சுமார் 110 ஏக்கர் அளவுக்கு விரிந்துள்ளது. ஆனால் குறைவான பகுதியில் மட்டுமே அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கீழடியில், வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது பல தொன்மையான பொருட்கள் மற்றும் கட்டுமானங்கள் கிடைத்தன. இதன் தொடர்ச்சி தெற்கு பகுதியில் இருக்கும் என்பதால் தெற்கு திசையில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தொடர்ந்து வடக்கு திசையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்தும் நீதிமன்றத்தில் தெளிவாக தெரிவித்துள்ளோம்.
தற்போது, உயர் நீதிமன்ற மதுரை கிளை அகழ்வாய்வு மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அனுமதியளிக்கவும், அகழ்வு பணியில் தமிழக அரசு இணைந்து செயல்பட அனுமதியளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும். வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் மாற்றியும் 3 வாரங்கள் ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது. 2 வாரங்களில் தொல்லியல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமிழக தொல்லியல் துறையை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதால் ஆய்வுப் பணிகள் நேர்மையாக நடக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: