வெள்ளி, 22 செப்டம்பர், 2017

இரட்டை இலை சின்னம் .. அக். 6-ந்தேதி விசாரணை ! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை அக்டோபர் மாதம் 6-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக். 6-ந்தேதி விசாரணை நடைபெறும்: தேர்தல் ஆணையம் புதுடெல்லி: முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால் அக்கட்சியின் பெயரையும், தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் தேர்தல் கமி‌ஷன் முடக்கியது. என்றாலும் தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்றும் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையிலான அணியினரும், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் தேர்தல் கமி‌ஷனிடம் தனித்தனியாக மனுக்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அந்த அணி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. பின்னர் அந்த அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தன.


சசிகலா அணியின் ஒரு பிரிவினர் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி–ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஒன்றாக இணைந்து தற்போது இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோருகிறார்கள். இதேபோல் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோருகிறார்கள்.   மாலைமலர்

இந்தநிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.கே.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு கடந்த 15–ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமி‌ஷன் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், இரட்டை இலை சின்னத்தை பெற அ.தி.மு.க. அணிகள் சார்பில் மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதால் அந்த சின்னத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்றும், சட்டப்படியும், தகுதி அடிப்படையிலும் விசாரணை நடத்தி இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி வருகிற அக்டோபர் 30–ந்தேதிக்குள் தேர்தல் கமி‌ஷன் இறுதி முடிவு எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி முடிவு செய்ய தேர்தல் கமி‌ஷன் வருகிற அக்டோபர் 5–ந்தேதி விசாரணை நடத்தபடும் என கூறியிருந்த நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை, அக். 6ம் தேதிக்கு மாற்றம் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: