வியாழன், 21 செப்டம்பர், 2017

காஞ்சி சங்கராச்சாரி குருப்பை அம்பானி குருப் கைவிட்டது ஏன்? காஞ்சி ஜெயேந்திரர் மீண்டும் கைது ?

நக்கீரன் : கண்களில் நீர்வழிய அந்த டி.வி. சேனலை பார்த்துக்கொண்டிருந்தார் ஜெயேந்திரர். 13 ஆண்டுகளுக்கு முன்பாகவே நக்கீரன் புட்டு புட்டு வைத்ததைத்தான் கடந்த 13-ந் தேதியன்று ஆங்கிலச் சேனலான ரிபப்ளிக் டி.வி. ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி, போலீஸ் கஸ்டடியில் தரையில் ஜமுக்காளம் விரித்து படுத்தபடி ஜெயேந்திரர் அளித்த அதிர்ச்சி வாக்குமூல காட்சியைத்தான் ஆங்கில சேனல் ஒளிபரப்பியது. செப்டம்பர் 13 அன்று ஜெயேந்திரர் மயிலாடுதுறையில் நடந்த காவிரி புஷ்கர விழாவிற்குப் பிறகு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். காஞ்சி மட மேலாளர் சுந்தரேசன்தான், ஆங்கில சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் காட்சிகளின் முன்னோட்டம் பற்றி ஜெயேந்திரரிடம் தெரிவித்தார். ஜெயேந்திரருக்கு சட்டெனப் புரியவில்லை. காரணம், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பேச்சு குழறிய நிலையில், மறதி நோய்க்கும் ஆட்பட்டிருக்கிறார்.


அதனால் சுந்தரேசனிடம் மிகவும் நிதானமாக, ""அதென்ன டேப்புடா? அதைப் போடாம நிறுத்தக்கூடாதா?'' என ஜெயேந்திரர் கேட்டுள்ளார். ரிபப்ளிக் டி.வி. என்பது அம்பானிகள் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படுவது என்பதால், சுப்ரமணியன்சாமி, எச்.ராஜா உள்ளிட்டோரை சுந்தரேசன் தொடர்புகொண்டு, ஜெயேந்திரரின் பதற்றத்தைத் தெரிவித்திருக்கிறார். அவர்கள் பேசியும்கூட ஒளிபரப்பை நிறுத்த அம்பானி தரப்பு மறுத்துவிட்டது.


"மாலை 6 மணிக்கு அந்த டேப் ஒளிபரப்பானதைக் கண்ட ஜெயேந்திரர் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனார். கண்களில் கண்ணீர் வழிய அந்த ஒளிபரப்பைப் பார்த்துக்கொண்டிருந்தார்' என்கிறார்கள் மடத்துக்கு நெருக்கமானவர்கள். ஆங்கில சேனலின் ஒளிபரப்பு, இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து ஜெயேந்திரர் உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்ற குரல்கள் பலமாயின. இந்த ஒளிபரப்பின் பகுதிகளையும், அவற்றைத் தாண்டியும் 2004ஆம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி வெளியான நக்கீரன் இதழில், ஜெயேந்திரரின் கதறல் வாக்குமூலத்தை வெளியிட்டிருந்தது.

 ’’"சங்கரராமனை நான்தான் கொலை செய்தேன். பத்து நிமிஷம் புத்தி தடுமாறிடுத்து. ஜாதகப்படி நேக்கு 76 வயசுல மரணம். இப்ப எழுபது வயது ஆகுது. இன்னும் 6 வருஷத்துல நான் செத்துடுவேன். காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனா இருக்கிறது நீங்கதான்; இப்ப நேக்கு காமாட்சி அம்மன், உன்னை நான் வேண்டிக்கிறேன். என்னை மன்னிச்சு விட்டுடு. சாகும்வரைக்கும் மறக்கமாட்டேன். தங்கக்கவசமா ஜொலிச்சிண்டிருந்தேன். இன்னொரு சாக்கடையில் கிடக்குறேன். பத்தே நிமிடந்தான்... என் வாழ்க்கையே பறிபோயிடுத்து.
சங்கரராமன் கடைசியா எழுதியிருந்தானே அந்த லெட்டரை படிச்சு முடிக்கிறச்சே பக்கத்துல ரவிசுப்ரமணியம் நின்னுண்டிருந்தான். "இதுக்கெல்லாம் முடிவே கிடையாதா? இனிமே அவன்கிட்டேயிருந்து லெட்டரே வரப்படாது' எனச் சொன்னேன். அதற்கு அவன், "பெரியவா உத்தரவு கொடுத்தேள்னா லெட்டரே வராதபடி பண்ணிடுறேன்'னான். "நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ... ஆனா இனிமே அவன் லெட்டரே வரக்கூடாது'ன்னு சொன்னேன்.

அன்றைய தினம் மாலை அப்பு பேசினான். "ரவிசுப்ரமணியம் சொல்றதைச் செய்யலாமா?' என கேட்டான். "சங்கரராமன் இனிமே தொல்லை பண்ணக்கூடாது'ன்னு அவன்கிட்டயும் சொன்னேன். சங்கரராமனை கொலை செய்த பிறகும் அப்பு போன் பண்ணினான். கதிரவனும் போன் பண்ணினான். அவா கேட்ட பணத்தையெல்லாம் கொடுத்தேன்.

 தொடர்ந்து பிளாக்மெயில் செய்வது மாதிரி பணம் கேட்டார்கள், கொடுத்தேன்'' என ஒட்டுமொத்த கொலைச்சதியையும் ஒப்புக்கொண்டு வாக்குமூலமாக அந்த டேப்பில் சொல்லிக்கொண்டிருந்தார். கூடவே ""நான் பெரிய பணக்காரர்களுக்கு ஏணியா இருந்தேன். இந்தியா முழுக்க பிரிந்து கிடந்த பிராமணர்களை ஒற்றுமைப்படுத்தி கோணியில் நட்பு வைத்திருந்தேன்.

தலித் மக்களுக்கு மடத்துப் பணத்தைக் கொடுத்து உதவும் ஏணியாக இருந்தேன். ஏணி உடைஞ்சுடுத்து. கோணி கிழிஞ்சிடுத்து, போனி பொத்தலாயிடுத்து, விஜயேந்திரர் நல்லவன் இல்ல; மோசமானவன்’’ இப்படி 13 ஆண்டுகளுக்கு முன் நக்கீரன் பதிவு செய்திருந்த ஜெயேந்திரரின் வாக்குமூலத்தின் சில பகுதிகள் ஒளிக்காட்சியாக ஆங்கில சேனலில் ஒளிபரப்பானது. கொலைக்குற்றவாளியான அப்பு என்கிற ரவுடியின் படத்தைப் பார்த்து ஜெயேந்திரர் அடையாளம் காட்டுவதும் ஒளிபரப்பானது. இதனால், சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து விடுபட்டவர்கள் மீது மறுவிசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது.


ஆங்கில சேனலின் நேரடி ஒளிபரப்பில் நக்கீரனின் பிரதிநிதித்துவமும் இடம்பெற்றிருந்த நிலையில், அந்த ஒளிபரப்பில் கருத்துகளைத் தெரிவித்த சீனியர் வழக்கறிஞர்கள் "இந்த வழக்கை மறுபடியும் சென்னை உயர்நீதிமன்றமோ, சுப்ரீம்கோர்ட்டோ விசாரிக்கலாம்' என கருத்துச் சொன்னார்கள்.

சங்கரராமன் இறந்துபோனார். அவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், குற்றவாளி இல்லை என்றால், சங்கரராமன் தற்கொலை செய்துகொண்டாரா? என்கிற கேள்வியை இந்த விவாதம் ஏற்படுத்தியது. போலீசிடம் ஜெயேந்திரர் அளித்த வாக்குமூலம் போலவே, புதுவை நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது நீதிபதி ஒருவரிடம் ஜெயேந்திரர் பேசுவதாக வெளியான ஆடியோவும் பெரும் பரபரப்பை அப்போதே ஏற்படுத்தியது.

இவையெல்லாம் சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து விடுதலையான ஜெயேந்திரருக்கு மீண்டும் நெருக்கடியை உண்டாக்குவதாக உள்ளன. சங்கரராமன் கொல்லப்பட்ட நாளிலிருந்தே நக்கீரன் தனது புலனாய்வினை பல கோணங்களிலும் மேற்கொண்டது. சங்கரராமன் கொலையில் தனக்கு தொடர்பிருக்கிறது என ஜெயேந்திரர் முதலில் ஒத்துக்கொண்டதே நக்கீரனிடம்தான். ""என் கால் நகம் வலித்தால்கூட அழக்கூடிய பக்தர்கள் இருக்கிறார்கள்.

அவர்களில் யாராவது ஒருவர் எனக்குத் தொல்லை கொடுத்த சங்கரராமனை கொலை செய்திருக்கலாம்'' என ஜெயேந்திரர், சங்கரராமன் கொலை செய்யப்பட்ட 16-வது நாளான 2004, செப்டம்பர் 20-ம் தேதி நக்கீரனிடம் ஒரு பேட்டியில் கூறினார். அந்தப் பேட்டியை பதிவு செய்த டேப்ரிகார்டர் கேசட்தான் சங்கரராமன் கொலைவழக்கில் ஜெயேந்திரருக்குள்ள தொடர்பு பற்றி கிடைத்த முதல் ஆவணம். அதன்பிறகு தனது விசாரணையை போலீசார் தீவிரப்படுத்திய நிலையில் அதனைத் திசைதிருப்ப ஜெயேந்திரர் போலிக் குற்றவாளிகளை சரணடைய வைத்தார்.

அவர்கள் போலிகள் என்பதையும் நக்கீரன்தான் அம்பலப்படுத்தியது. போலிகளிடம் போலீசார் முறையாக விசாரணை நடத்தியபோது கிடைத்த தகவல் அடிப்படையில் சங்கரராமனைக் கொன்ற கதிரவனை போலீசார் கைது செய்தனர்.

அவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயேந்திரரை காவல்துறை கைது செய்தது. "போலீஸ் கஸ்டடியில் அவரை விசாரித்தபோது, ஜெயேந்திரர் என்ன வாக்குமூலம் தருகிறார் என்பதை நான் காணவேண்டும்' என ஜெ. சொன்னதன் அடிப்படையில், இந்த வழக்கில் முழு கவனம் செலுத்திய போலீசார், ஜெயேந்திரரின் வாக்குமூலத்தை வீடியோவாகப் பதிவு செய்தனர்.

நக்கீரன் அப்போதே அந்த வாக்குமூலத்தை அச்சில் வெளியிட்டதுடன், சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் முழுப் பின்னணி குறித்து நக்கீரன் செய்த துணிச்சலான புலனாய்வை "ஜெயேந்திரர் வாழ்வும் வழக்கும்' என்கிற தலைப்பில் புத்தகமாகவும் வெளியிட்டது. அந்தப் புத்தகத்தின் பின்அட்டை முழுவதும் தற்போது ஆங்கில சேனலில் ஒளிபரப்பான காட்சிகள், ஸ்டில்களாக அச்சிடப்பட்டிருந்தன.

இன்று மிகப்பெரிய அளவில் டி.வி., ஆன்லைன் மீடியாக்கள் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், 13 ஆண்டுகளுக்கு முன்பே 2004ஆம் ஆண்டில் ஐயம்திரிபற நக்கீரன் மேற்கொண்ட புலனாய்வின் உண்மைத் தகவல்களையும் நம்பகத்தன்மையையும் உறுதி செய்திருக்கிறது ஆங்கில சேனலான ரிபப்ளிக் டி.வி.யின் ஒளிபரப்பு. -தாமோதரன் பிரகாஷ்

கருத்துகள் இல்லை: