வியாழன், 21 செப்டம்பர், 2017

அப்பல்லோ வீடியோக்கள் அம்பலம்! 2 கோடி பேரம் ! உங்களிடம் காசு இருந்தால் நீங்கள் குளோஸ்?


வினவு :நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்காக பணம் செலவழிக்க முடியும் என்ற நிலையில், மருத்துவ அறிவு குறித்து அதிகம் அறியாத அப்பாவி என்றால் அப்பல்லோ மருத்துவமனை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஹேமநாதனின் கதை ஒரு சான்று!
சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த உண்மைச் சம்பவம் இது! இப்படியெல்லாம் நடக்குமா என்று எவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் அநீதியும் கூட!
நோய்வாய்ப்பட்ட தனது தாயாரை அப்பல்லோவில் சேர்க்கிறார் திரு.ஹேமநாதன். சேர்க்கும் போது அந்த தாயாருக்கு மூக்கில் இருந்து கொஞ்சம் ரத்தம் வந்தது, அவ்வளவே. பிறகு தலைக்கு எம்.ஆர்.ஐ-ஸ்கேன், இலட்ச ரூபாய்களில் நடந்த பல்வேறு சோதனைகள், அந்த தாயாரின் கபால ஓட்டை பிரிக்கும் அறுவை சிகிச்சை, நினைவு தவறுதல், வீட்டுக்கு அனுப்பி மீண்டும் சேர்த்தல், அதில் 150 நாட்கள் சிகிச்சை அனைத்தையும் விவரிக்கிறார் ஹேமநாதன்.

ஆரம்பத்திலேயே அப்பல்லோ மருத்துவமனை பெரிய தவறு ஒன்றை சிகிச்சையின் போது செய்திருக்கிறது. அதை மறைத்து கூடுதல் சோதனைகள் செய்து வசூலித்திருக்கிறார்கள். பிறகு தவறு நடந்ததை ஒத்துக் கொண்டு சிகிச்சை இலவசம் என்று பேரம் பேசியிருக்கிறார்கள். கடைசியில் மகனுக்கு தெரியாமலேயே அந்த தாயாரை சென்னை மருத்துவமனையில் அனாதை என்று சேர்த்திருக்கிறார்கள்.
அம்மாவைத் தேடி அப்பல்லோ வார்டுக்கு சென்ற ஹேமநாதனை அரசு மருத்துவமனைக்கு போகுமாறு விரட்டியிருக்கிறார்கள். காரணம் கேட்டால், அவ்வளவுதான், யாரிடமும் புகார் செய்தாலும் ஒன்றும் நடக்காது, நீதிபதிகள், போலீஸ்காரர்கள், அதிகாரிகள் அனைவரும் எங்களிடம் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள் என்று பாதுகாப்பு அதிகாரி பேசியிருக்கிறார்.
சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு சுகாதாரத் துறை செயலர் பெயரில் கடிதத்தை வழங்கியிருக்கிறது அப்பல்லோ நிர்வாகம். ஐந்தாறு மாதங்கள் எப்படியாவது தாயாரை காப்பாற்ற வேண்டும் என்று போராடிய ஹேமநாதனை விதவிதமாக சித்ரவதை செய்திருக்கிறது அப்பல்லோ மருத்துவமனை. அத்தனை விவரங்களையும் அவர் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அது தெரிந்ததும் 2 கோடி ரூபாய் பேரம் பேசியிருக்கிறார்கள்.
நண்பர்களே, நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்காக பணம் செலவழிக்க முடியும் என்ற நிலையில், மருத்துவ அறிவு குறித்து அதிகம் அறியாத அப்பாவி என்றால் அப்பல்லோ மருத்துவமனை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஹேமநாதனின் கதை ஒரு சான்று!
இது குறித்து புகாரைக் கூட போலீசு பதிவு செய்யவில்லை. தற்போதுதான் செய்திருக்கிறது என்கிறார் ஹேமநாதன். அப்பல்லோவை சட்டப் போராட்டத்தில் வெல்ல முடியுமா என்பது அப்பல்லோவோடு கூட்டணி வைத்திருக்கும் அரசு அதிகாரிகள், போலீசு அதிகாரிகள், நீதிமன்ற பிரமுகர்கள், அமைச்சர்களின் அசுர பலத்தோடு மோதுவது !
ஒருவேளை ஹேமநாதனால் நீதிமன்றத்தில் வெல்ல முடியாமல் போனாலும், மக்கள் மன்றத்தில் அவரை வெற்றிபெற வைப்பது நமது கடமை. இந்த விவரத்தை வெளியே கொண்டு வந்து அம்பலத்தில் ஏற்றிய நக்கீரன் இதழுக்கு வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை: