வியாழன், 21 செப்டம்பர், 2017

சம்பளத்தைப் பிடிக்கக் கூடாது: நீதிமன்றம்! அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பு போராட்ட...


மின்னம்பலம் : அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று (செப்,21) நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
நீதிமன்ற உத்தரவையும் மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்திக் கடந்த 7ஆம் தேதி முதல் 9 நாட்களாக வேலைநிறுத்தம், காத்திருப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் 21ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று நீதிபதிகள் கே கே சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜரானார்.

பின்னர் 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ முன் வைத்தது. இதில் 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வரும் செப்,30 அன்று அறிக்கை தாக்கல் செய்யும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு டிசம்பருக்குள் பதில் அளிக்கும் என்றும் தலைமை செயலாளர் விளக்கம் அளித்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் 7ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக அக்டோபர் 13க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும். இந்தப் பரிந்துரையை அமல்படுத்தத் தாமதமாகுமானால் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிடப்படும் என்றும் கூறினார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கூறி வழக்கு விசாரணையை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் 10 நாட்கள் சம்பளத்தைப் பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: