வியாழன், 21 செப்டம்பர், 2017

கீழடி ,,,, பி.ஜே.பி-யின் எடுபிடி இந்த அ.தி.மு.க. அரசு!’’ - கொதிக்கிறார் சுப.வீரபாண்டியன்

விகடன்   : "ஈ.ஜெ.நந்தகுமார் : மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசின் எடுபிடியாகச் செயல்படுகிறது, தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவைச் செயலாளர் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், சரஸ்வதி நதியை தேடும் மத்திய அரசு, தமிழகத்தின் கீழடியில் மண்ணைப் போட்டு மூடுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் பள்ளிச்சந்தையில் உள்ள கீழடி மந்தை திடலில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பில் கீழடி அகழ்வாய்வுப் பணிகளைத் தொடர்ந்து விரைவாக நடத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரவையின் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் சேங்கை மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கீழடியில் நடைபெறும் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட சுப. வீரபாண்டியனிடம் பேசினோம்.

“கீழடியின் வயது 2,200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தமிழன் நாகரிகத்தோடு விஞ்ஞான அறிவுகளையும் பயன்படுத்தி வாழ்ந்திருக்கிறான் என்கிற அடையாளத்தை மத்திய அரசு மறைக்கப் பார்க்கிறது. அதுதான் வேதனையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. அதுவே கவலையாகவும் இருக்கிறது. தமிழ் இனம்தான், இந்திய தேசிய இனத்தில் மூத்த இனம் என்பதற்கு கீழடி மிகப்பெரிய வரலாற்றுச் சான்றாகும். அதற்கான ஆவணங்கள் இங்கே உள்ளன. இதுவரை நாம் புத்தகத்தில், இலக்கியத்தில்தான் நம்முடைய நாகரிகம், பண்பாடுகளைப் பற்றி படித்து வந்திருக்கிறோம். ஆனால், கீழடியானது தமிழர்களின் வாழ்க்கை முறையை நமக்கு நேரடியாகக் காட்டியிருக்கிறது. கீழடி நாகரிகத்தை வெளிப்படுத்துவதில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. காரணம், அது பி.ஜே.பி-யின் எடுபிடி அரசாக செயல்படுவதுதான்.
நாட்டில் யாரும் நிம்மதியாக இல்லை. நீதிமன்றங்கள், ஆசிரியர்களை மிரட்டுகின்றன. ஆனால், சாராய வியாபாரி விஜய் மல்லையாவை நீதிமன்றம் முன்ஜாமீனில் விடுகிறது. இந்தியாவின் அதிகார மையங்களாக சாமியார்கள்தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் செயல்படும் அரசு தற்போது இல்லை. கீழடி என்பது மிகவும் தொன்மையான சான்று. பஞ்சைக்கொண்டு தீயை அணைக்க முடியாது. காலம் ஒருநாள் இவர்களுக்குப் பதில் சொல்லும். கீழடி என்பது வைகைக்கரை நாகரிகம். வெறும் ஐம்பது சென்டிலேயே ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்திருக்கிறது என்றால், 110 ஏக்கரில் ஆய்வு நடத்தினால் தமிழன் வாழ்ந்த நாகரிகம் முழுவதுமாக வெளிப்பட்டுவிடும். முதன்மையான இனம், தமிழ் இனம் என்பது உலகத்துக்கே தெரிய வரும் என்பதற்காகவே மத்திய பி.ஜே.பி. அரசு, திட்டமிட்டு இதை மறைக்கப் பார்க்கிறது.
சிந்து சமவெளி நாகரிகம், ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றிருந்தாலும் கீழடிதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தொடர்பான அறிக்கைகள் 11 ஆண்டுகளாக  வெளிவராமல் இருப்பதே தமிழர்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம்தான். அந்த அறிக்கையைத் தயார் செய்த தொல்லியல்துறை அறிஞர் ராகவன் மாற்றப்பட்டார். அதே நேரத்தில் அறிக்கைகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, விரைவாக முடிக்க நினைத்த மகேஸ்வரி என்கிற அதிகாரியும் மாற்றப்பட்டார். அதேபோலத்தான் தொல்லியல்துறை அதிகாரியாக கீழடியில் செயல்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன், அஸ்ஸாமில் உள்ள மியூசியத்துக்கு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டிருக்கிறார். இவரும் விரைந்து பல செய்திகளை கீழடியில் இருந்து வெளிக்கொண்டு வந்தார். ஊழல் செய்யாமல் ஒருவர் நேர்மையாகவும், விரைவாகவும் செயல்பட்டார் என்பதற்காகவே அவரை பணியிட மாற்றம் செய்துள்ளனர். ஏன் நேர்மையாக இருக்கிறாய் என்றுதான் அந்த அதிகாரிகளைப் பார்த்து மத்திய-மாநில அரசுகள் கேட்கின்றன?
மத்திய அரசாங்கமோ சரஸ்வதி நதியைத் தேடுகிறது, ஆனால், கீழடியில் மண்ணைப் போட்டு மூடப்பார்க்கிறது. கோவலனும், கண்ணகியும் உலவிய பூமிதான் கீழடி. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் வாழ்ந்த பழைய மாமதுரை இது. காசி நகருக்கு பலகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு, கீழடி அகழ்வாய்வுக்கு தெருக்கோடியை ஒதுக்குகிறது. கீழடியில் அகழ்வாராய்ச்சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அறிவியல் பாடத்திட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகள் இடம்பெறுகின்றன. ஆனால், தமிழக வரலாறு பாடத்திட்டம் நாற்பது ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படவில்லை. வருகின்ற கல்வியாண்டிலாவது, கீழடியின் தொன்மை, தமிழர்களின் நாகரிகம் மற்றும் பண்பாடுகுறித்த பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும்" என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார் சுப.வீ. மேலும், "கீழடி அகழ்வாராய்ச்சி முழுமையாக நடைபெற வேண்டும். அதற்கு எந்தத் தடை வந்தாலும் அதை தகர்த்தெறிவோம்" என்ற சுப.வீரபாண்டியனின் கோரிக்கையை ஏற்று நாமும் அதற்கான உறுதியேற்போம்!

கருத்துகள் இல்லை: