செவ்வாய், 10 அக்டோபர், 2017

தீர்ப்பு வரும் வரை இந்த ஆட்சி நீடிக்கும்: மு.க.ஸ்டாலின் பேட்டி


நக்கீரன் : திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  இன்று (09-10-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:செய்தியாளர்: கேரளாவில் பிராம்மணரல்லாத பிற சாதியினரும் கோவில்களில் அர்ச்சகராக பணியாற்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அதை செயல்படுத்தாமல் இருக்கிறதே?ஸ்டாலின்: இந்தியாவிலேயே முதன்முதலில் தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி நடந்தபோதுதான் தமிழ்நாட்டில் அதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. நீதிமன்றத்தில் சில பிரச்னைகள் வந்தபோது, அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக முறையாக உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இங்கு செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கேரள முதலமைச்சர் அதனை இன்றைக்கு நிறைவேற்றி இருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. இதுகுறித்துப் புள்ளி விவரங்களோடும், ஆதாரங்களோடும் நான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
செய்தியாளர்: வழக்கு 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது, இதனால் காலதாமதம் ஏற்படுகிறதே?
ஸ்டாலின்: இந்த காலதாமதத்துக்குக் காரணமே, எடப்பாடி பழனிசாமி தரப்பு கால அவகாசம் கேட்டிருப்பதுதான். இதை எப்படியாவது நீட்டித்து, ஆட்சியில் இருந்து கொள்ளையடிக்க அவர்கள் திட்டமிடுகிறார்கள். காலம் தாழ்ந்து கிடைத்தாலும், நீதி நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் இருக்கிறது.
செய்தியாளர்: இந்த காலதாமதம் குதிரை பேரத்துக்கு வழி வகுக்குமே?
ஸ்டாலின்: குதிரை பேரத்துக்கு மட்டுமல்ல, கொள்ளையடிப்பதற்கும் வழி வகுக்கும்.
செய்தியாளர்: இந்த ஆட்சி இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும்?
ஸ்டாலின்: நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை நீடிக்கும்.
செய்தியாளர்: கீழடியில் அகழ்வாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டதே?
ஸ்டாலின்: ஏற்கனவே, இதுதொடர்பாக மத்திய – மாநில அரசுகளைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன்.
செய்தியாளர்: திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கெயில் திட்டத்தை எதிர்த்துப் போராடுவோம் என்று இப்போது அறிவிப்பது முரண்பாடானது என்று பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்து இருக்கிறாரே?
ஸ்டாலின்: அவர் எப்போதுமே முரண்பாடாகத்தான் எல்லாவற்றையும் சொல்லி வருகிறார். விவசாயப் பெருங்குடி மக்களை, விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் கெயில் உள்ளிட்ட எந்தவொரு திட்டமாக இருந்தாலும் திமுக எதிர்க்கும். அதனை நான் எனது அறிக்கையிலும் தெரிவித்துள்ளேன். தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டு உள்ளார். நெடுஞ்சாலைகளின் அருகில் பைப்லைன் அமைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். எனவே, விவசாய நிலங்கள் வழியாக அவற்றைக் கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை.
செய்தியாளர்: டெங்குவை விட கொடியது திமுக என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்திருக்கிறாரே?

ஸ்டாலின்: இந்த ஆட்சியே ஒரு டெங்கு ஆட்சி.

கருத்துகள் இல்லை: