புதன், 11 அக்டோபர், 2017

சந்தானம் மல்ட்டிப்ளக்ஸ் பஞ்சாயத்து! சமரசப் படலம் ஆரம்பம்

விகடன் : எஸ்.மகேஷ் Chennai: நடிகர் சந்தானத்துக்கும் பில்டர்
சண்முகசுந்தரத்துக்கும் இடையே நடந்த வாக்குவாதம் அடிதடியில் முடிந்துள்ளது. இதனால், இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீஸார், விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், நடிகர் சந்தானம் தரப்பிலிருந்து பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் போனில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.மகேஷ்சென்னை வளசரவாக்கம், சௌத்ரி நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர், கட்டுமான நிறுவனத்தை நடத்திவருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு, குன்றத்தூர் அருகிலுள்ள கோவூர் பகுதியில், ‘மல்ட்டிப்ளக்ஸ் காம்ப்ளக்ஸ்’ கட்டுவது தொடர்பாக சண்முகசுந்தரத்தை அணுகியுள்ளார்,  நடிகர் சந்தானம். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டப்படும் அந்த காம்ப்ளக்ஸின் பணிகள் நடந்துவந்தபோது, திடீரென இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதனால், கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து நடிகர் சந்தானம், கொடுத்த பணத்தை சண்முகசுந்தரத்திடம் திரும்பக் கேட்டார். அதில், குறிப்பிட்ட தொகையை சண்முகசுந்தரம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. மீதிப் பணத்தை சண்முகசுந்தரம் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இந்த நிலையில், சமீபகாலமாக நடிகர் சந்தானத்தின் போன் அழைப்புக்கு சண்முகசுந்தரம் பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த நடிகர் சந்தானம், நேற்று வளசரவாக்கத்திலுள்ள அலுவலகத்துக்கு வந்துள்ளார். அவருடன் சந்தானத்தின் மேலாளர் ரமேஷும் வந்துள்ளார்.

அலுவலகத்திலிருந்த சண்முகசுந்தரத்துடன் நடிகர் சந்தானம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது, சண்முகசுந்தரத்தின் நண்பரும், பா.ஜ.க பிரமுகருமான வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் உடன் இருந்துள்ளார். நடிகர் சந்தானத்துக்கும் சண்முகசுந்தரத்துக்கும் இடையே நடந்த வாக்குவாதம், ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர்.
இந்தச் சமயத்தில், பிரேம் ஆனந்தின் முகத்தில் சந்தானம் ஓங்கிக் குத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதில் பிரேம் ஆனந்தின் பல், சந்தானத்தின் கையில் குத்தி ரத்தம் வழிந்தது. இந்தச் சம்பவம்குறித்து தகவலறிந்ததும், வளசரவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். பிரேம் ஆனந்த், நடிகர் சந்தானம் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நடிகர் சந்தானம், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார். பிரேம் ஆனந்துக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து தி.நகர். போலீஸ் துணை கமிஷனர் அரவிந்தனிடம் பேசினோம். “இந்தச் சம்பவம், பணத்தகராறில் நடந்துள்ளது. நடிகர் சந்தானம் கொடுத்த புகாரின் பேரில் சண்முகசுந்தரம், பிரேம்ஆனந்த்மீதும், சண்முகசுந்தரம் கொடுத்த புகாரில் நடிகர் சந்தானம், அவரின் மேலாளர் ரமேஷ் ஆகியோர் மீதும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளோம். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அடுத்தகட்ட விசாரணை நடந்துவருகிறது. மேலும், சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை ஆராய்ந்துவருகிறோம். அதில், யார்மீது தவறு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நடிகர் சந்தானம், மருத்துவமனையிலிருந்து தலைமறைவாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறதே என்று போலீஸ் துணை கமிஷனர் அரவிந்தனிடம் கேட்டதற்கு, “அவரிடம் நேற்றிரவுதான் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளோம். நடிகர் சந்தானத்துக்கு சிகிச்சை முடிந்ததால், அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரது காரை போலீஸ் நிலையத்துக்குக் கொண்டுவந்துவிட்டதால், மற்றொரு காரில் அவர் சென்றார். இதனால், அவர் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் பரவுகின்றன. இந்த வழக்கில், தேவைப்பட்டால் நடிகர் சந்தானம், சண்முகசுந்தரம், பிரேம் ஆனந்த் ஆகியோர் கைதுசெய்யப்படுவார்கள்” என்றார்.
இந்த நிலையில், நடிகர் சந்தானம் தரப்பிலிருந்து பா.ஜ.க-வின் முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு போன் அழைப்பு சென்றுள்ளது. அதில் பேசியவர்கள், ‘இந்தப் பிரச்னையைப் பெரிதுப்படுத்த வேண்டாம். ஆத்திரத்தில் நடிகர் சந்தானம் அடித்துவிட்டார். சமரசமாகச் சென்றுவிடுவோம்’ என்ற தொனியில் சந்தானம் தரப்பினர் பேசியுள்ளனர். அதற்கு பா.ஜ.க. பிரமுகர், சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு பதில் சொல்வதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: