சனி, 14 அக்டோபர், 2017

தகுதிநீக்க வழக்கு : டெல்லியில் சொல்லப்பட்ட யோசனை!

minnambalam : முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும், கொறடாவின் பரிந்துரையின் பேரில், சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, திமுக சார்பில் கொறடா சக்கரபாணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணையில், திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், சபாநாயகரிடம் சரமாரியாக நான்கு கேள்விகளை முன்வைத்தார். பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததால், வழக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பன்னீர்செல்வம் அணியின் எம்.எல்.ஏ.,செம்மலை, உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி மனுதாக்கல் செய்துள்ளார். அவர் தன்னுடைய மனுவில்,"சபாநாயகரின் அதிகாரவரம்பு குறித்து விசாரிக்கும் உரிமை உச்சநீதிமன்றத்துக்கே உள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்மலை மனுவின் பின்னணி குறித்து விசாரித்தபோது,"நேற்று முன்தினம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து டெல்லி தரப்புடன் நடைபெற்ற ஆலோசனையில் குறிப்பாக, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்துள்ள வழக்கு குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பன்னீர் தரப்பிலிருந்து," திமுக தொடர்ந்துள்ள வழக்கினால், 18 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்ததன் அடிப்படையில் பார்த்தால், எங்கள் தரப்பை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை சபாநாயகருக்கு ஏற்படும்"என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து டெல்லி தரப்பிலிருந்து பன்னீர்செல்வம் தரப்பினருக்கு சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில்தான் நேற்றைய தினம் ( அக்டோபர் 13) பன்னீர்செல்வம் அணியின் மூத்த எம்.எல்.ஏ.வும், அரசுக்கு எதிராக வாக்களித்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவருமான செம்மலை," தகுதிநீக்க வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென" வழக்கு தொடர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை: