வெள்ளி, 13 அக்டோபர், 2017

உயரும் சினிமா டிக்கெட் விலை

மின்னம்பலம் :ஒருவழியாக முடிவுக்கு வந்தது கேளிக்கை வரி பிரச்சினை. 10 சதவிகித கேளிக்கை வரியை 8 சதவிகிதமாகக் குறைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழக அரசு.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவிகிதம் கேளிக்கை வரி வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. இதற்கு திரைத் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அந்த கோரிக்கையை அரசு ஏற்க மறுத்த நிலையில் கடந்த மூன்று நாட்களாகத் திரைத் துறையினருக்கும், அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சு வார்த்தையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் பிரகாஷ் ராஜ், திரையரங்க விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திரைத் துறை சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரண்டு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் இருந்த நிலையில் இன்று (அக்.13) மீண்டும் அரசுடன் திரைத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன் முடிவில் கேளிக்கை வரியை 8 சதவிகிதமாகக் குறைத்துக்கொள்ள அரசு முன்வந்தது.
திரையரங்கக் கட்டணத்தைப் பொறுத்தவரை, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் குறைந்தபட்சமாக 50 ரூபாயும், அதிகபட்சமாக 150 ரூபாயும் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற திரையரங்குகளில் அதிகபட்சம் 100 ரூபாய் வரையில் வசூலித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இனி, தோராயமாக (ரூ.150 + ஜிஎஸ்டி 28% (ரூ.42) + கேளிக்கை வரி 8% (ரூ.12 ) = ரூ.204 ) வசூலிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து பேசிய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன்,
* இனி திரையரங்குகளில் முறையான டிக்கெட் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்,
* பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்களுக்கு எம்ஆர்பி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும், அதை மீறி அதிகமாக விற்றால் தாராளமாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
* திரையரங்குகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்துகொள்வார்கள்.
* ஆன்லைன் கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
* நடிகர்களின் சம்பளம், தயாரிப்பு செலவு ஆகியவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆலோசனை நடத்த வேண்டும்.
* அரசு அமைக்கும் கண்காணிப்புக் குழுவுக்குத் திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
என்று அவர் கூறியுள்ளார். அரசின் இந்த புதிய கேளிக்கை வரிக் கொள்கை விரைவில் அரசாணையாக வெளிவரவுள்ளது.
திரையரங்குகளைக் கட்டுப்படுத்தும்!
இந்தத் தகவலை உறுதிபடுத்தும் வகையில் விஷால் இன்று (அக்டோபர் 13) காலை திரையரங்கக் கட்டணம் குறித்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்து வெளியிட்ட அறிவிப்பு மேயாத மான் திரைப்படத்தின் ரிலீஸை உறுதி செய்திருக்கிறது. ஒரே ஒரு படம் மட்டுமே ரிலீஸானால், மீண்டும் மீண்டும் ஒரே படத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால், இப்போது இரண்டு படங்கள் ரிலீஸ் என்பதால் இந்த தீபாவளியை மேலும் சிறப்பாகக் கொண்டாடலாம்.

கருத்துகள் இல்லை: