செவ்வாய், 7 நவம்பர், 2017

கலைஞரை மோடி சந்தித்த பலனை பாஜக உடனே அறுவடை செய்தது

Sowmian Vaidyanathan : சென்னை வந்த பிரதமர் மோடி தலைவர் கலைஞரை சந்தித்தது பற்றிய ஆயிரம் ஹேஷ்யங்கள் உலவினாலும்...,
இன்றைய இந்த நிகழ்வின் மூலம் உடனடி பலனை அறுவடை செய்தது மோடியும், பாஜகவும் மட்டுமே..!
இந்த சந்திப்பு நிகழாமல் இருந்திருந்தால், இணையத்தில் பலமான தளமமைத்து செயல்படும் ஒரு லட்சத்திற்கும் சற்று கூடுதலான திமுகவினர்... இந்நேரம், மோடியின் ஒவ்வொரு அசைவையும், அவரது பேச்சுக்களையும்..., அவருக்கும் அதிமுக ஆட்சியாளர்களுக்கும் இருக்கின்ற நெருங்கிய தொடர்புகளையும் புட்டுப் புட்டு வைத்து, நீட், இந்தி திணிப்பு, மீத்தேன், ஜி எஸ் டி, பண மதிப்பிழப்பு... இப்படியாக மோடியின் ஒட்டுமொத்த தோல்விகளையும் மீண்டுமொரு முறை தெளிவாக புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டு மக்கள் மன்றத்தில் வைத்து, இணையம் முழுக்க வைரலாக்கியிருப்பர்.
ஏற்கனவே தமிழக அதிமுக ஆட்சியாளர் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்ற நிலையில்... அதிமுக சார்பு தந்தி டீவியின் கருத்துக்கணிப்பிலேயே திமுகவுக்கு ஆதரவாக 55 சதவிகித மக்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய நிலையில்.... அந்த ஆட்சியாளர்களே... மோடி தான் தங்களைக் காப்பாற்றும் கடவுள் என்று மேடை போட்டு பேசி வரும் நிலையில்....

அதே அடையாளத்தோடு மோடி இங்கு வந்து சென்றால், அதிமுக ஆட்சியின் மீது பொது மக்களுக்கு இருக்கின்ற அத்தனை கோபங்களும் மோடியின் மீது ஒட்டு மொத்தமாக இறக்கி வைக்கப்பட்டிருக்கும். அதற்கு இணையதள திமுகவினரும் பக்காவாக அடித்தளம் அமைத்துக் கொடுத்திருப்பார்கள்.
குஜராத்திலேயே பாஜக அடிவாங்கப்போவதை இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெளிவாக எடுத்துரைத்துள்ள இந்நேரத்தில், தமிழகத்தில் தன் கட்சி மீது கட்டமைக்கப்படும் மோசமான பிம்பம், நிச்சயமாக வட இந்திய மாநிலங்களில் இன்னும் மோசமாக எதிரொளிக்கும் என்பது மோடி வகையறாக்களுக்கு நன்றாகவே புரியும்..!
இந்த நிலையில் தான் தாங்கள் அதிமுகவுக்கும் அதன் நடப்பு ஆட்சிக்கும் பாதுகாவலர்கள் இல்லை என்பதை உறுத்திப்படுத்த... தலைவர் கலைஞரை சந்தித்த நிகழ்வானது, மோடிக்கு ஏற்படவிருந்த பெரிய பிம்ப சிதைப்பிலிருந்து அவரைக் காப்பாற்றியிருக்கின்றது..!
இதைத்தான் இன்றைய கலைஞர் - மோடி சந்திப்பின் முக்கிய விளைவாக நாம் பார்க்க வேண்டியுள்ளது..!
சரி... இதனால் திமுகவுக்கு என்ன பலன் என்று கேட்பீர்களேயானால்...
மோடிக்கு திமுகவினரால் கிடைத்த மதிப்பிழப்பு தடைக்கு கைம்மாறாக... அதிமுக ஆட்சியைக் கவிழ்த்து அல்லது கலைத்து தமிழகத்தை காப்பாற்ற பாஜக முன்வரும் என்பது தான்..!

கருத்துகள் இல்லை: