வெள்ளி, 8 டிசம்பர், 2017

சேகர் ரெட்டியின் 'டைரி' குறிப்பு அமைச்சர்களின் பெயர் பட்டியல் ... பன்னீர் . விஜயபாஸ்கர் ......

tamilthehindu :தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வருமான வரித்துறை சோதனைகள் மிக அதிகமாக அரங்கேறின. இனியும் தொடரலாம்.
அந்த வகையில், ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்த சோதனை 2016 டிசம்பர் 21-ம் தேதி அன்று அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை. தமிழக அரசியல் வரலாற்றில் இது மிகப்பெரும் கரும்புள்ளி என விமர்சிக்கப்பட்டது. காரணம், பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர் ஒருவர் வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது அதுவே முதன்முறை.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையைத் தொடர்ந்து தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஒரு சாதாரண ஒப்பந்ததாரராக வாழ்க்கையைத் தொடங்கிய சேகர் ரெட்டி அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமானதும் பின்னர் கோடிகளில் புரளும் அளவுக்கு உயர்ந்ததும் பக்கம்பக்கமாக எழுதித் தீர்க்கப்பட்டன. அவருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான நெருக்கம் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்பட்டது சேகர் ரெட்டியின் 'டைரி'. அந்த டைரியில் பல்வேறு பெரும் அரசியல் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக அப்போதே தகவல் வெளியானது.
ஒவ்வொரு முறை தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தபோதும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், சேகர் ரெட்டியின் ரகசிய டைரி குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று சேகர் ரெட்டியின் அந்த சர்ச்சை டைரியின் சில பக்கங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக இன்று செய்தி ஒளிபரப்பியது. அவர்களுக்குக் கிடைத்த அந்தப் பக்கங்களில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேகர் ரெட்டியின் இந்த டைரி பக்கங்கள் தமிழக அரசியலை புரட்டிப்போட வாய்ப்புள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்

கருத்துகள் இல்லை: