சனி, 9 டிசம்பர், 2017

குஜராத் வரிசையில் காத்திருந்து ஓட்டு போடும் மக்கள்.. முதற்கட்ட தேர்தல்

dhinamalar :ஆமதாபாத்:   குஜராத்தில், 89 தொகுதிகளுக்கு, இன்று(டிச.,9) முதற்கட்ட சட்டசபை தேர்தல் காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 89 தொகுதிகளில் நடக்கும் இந்த தேர்தலில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அங்கு அவை சரி செய்யப்பட்ட பின்னர் ஓட்டுப்பதிவு துவங்கியது. முதல்வர் ரூபானி முதல் ஆளாக சென்று ஓட்டு போட்டார்.பகரூச் சட்டசபை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், திருமண கோலத்தில் வந்து ஓட்டு போட்டனர்.
சாதனை படைக்கும் வகையில், மக்கள் தங்களது ஓட்டை பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் டுவிட்டரில் கூறியள்ளதாவது: ஓட்டுப்போடுவது ஜனநாயகத்தின் ஆன்மாவாக உள்ளது. முதல் முறையாக ஓட்டு போடும் வாக்காளர்களை வரவேற்கிறேன். குஜராத் மக்கள் அதிகளவு ஓட்டு போட்டு, ஜனநாயக திருவிழா கொண்டாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


குஜராத் சட்டசபைக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில், இன்று நடக்க உள்ள தேர்தலில், 89 தொகுதிகளில், 57 பெண்கள் உள்பட977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்டமாக, 14ம் தேதி, 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. 18ல், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இன்று நடக்கும் தேர்தலில், பா.ஜ., முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட 977 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொடர்ந்து, ஐந்தாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில், பா.ஜ., உள்ளது. கட்சி தலைவராக, ராகுல் பொறுப்பேற்க உள்ள நிலையில், குஜராத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் உள்ளது.

முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில், பிரதமர் நரேந்திர மோடி, 15 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல், ஏழு நாட்களில், ஏழு கூட்டங்களில் பங்கேற்றார்

கருத்துகள் இல்லை: