வெள்ளி, 8 டிசம்பர், 2017

இந்து கோவில்களை இடிப்பதாக சொல்லவில்லை: திருமாவளவன் விளக்கம்

இந்து கோவில்களை இடிப்பதாக சொல்லவில்லை: திருமாவளவன் விளக்கம்மாலைமலர் : அம்பேத்கார் நினைவு நாள் கூட்டத்தில் இந்து கோவில்களை இடிப்பதாக சொல்லவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ‘மாலை மலருக்கு’ அளித்த பேட்டி வருமாறு:-
மீண்டும் கவர்னர் அதிகாரி சந்திப்பு, மக்கள் சந்திப்பு என்று களம் இறங்கி விட்டாரே?
பதில்:- கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதும் வரவேற்க கூடியதேயாகும். அது அவரின் மனித நேயத்தை காட்டுகிறது. கவர்னரின் இந்த நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் வரவேற்று பாராட்டுகிறோம். ஆனால் மாவட்ட அதிகாரிகளை சந்திப்பது அவர்களிடம் ஆலோசனை நடத்துவது போன்ற நடவடிக்கைகள் மீறல் மட்டுமல்ல சட்ட மீறலாகும்.



கவர்னர் இங்குள்ள முதல்வர் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோரை மீறி ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவது தவறான முன் உதாரணமாக அமையும். இது மாநில சுயாட்சி உரிமைகளை பாதிக்கும் செயலாகும். கவர்னரின் இந்த ஜனநாயக விரோத போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

கே:- குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றதா?

ப:- மத்திய, மாநில அரசுகளின் மெத்தன போக்கால் குமரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் உயிர் இழக்கவும், காணாமல் போகவும் நேர்ந்துள்ளது. இன்னும் அந்த துயரத்தில் இருந்து குமரி மாவட்ட மக்கள் மீளவில்ல. மின் இணைப்பு இல்லாமல் குமரி மாவட்டம் இருளில் மூழ்கி கிடக்கிறது.

குமரி மாவட்டத்தை பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். உயிர் இழந்தோர் குடும்பத்திற்கும் தலா ரூ.50 லட்சம் இழப்பு வழங்க வேண்டும். காணாமல் போனோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.



ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வோருக்கு அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை அளிக்க வேண்டும்.

கே:- அம்பேத்கார் நினைவு நாள் கூட்டத்தில் இந்து கோவில்களை இடிப்போம் என்று நீங்கள் பேசியதாக சொல்லப்படுகிறதே?

ப:- பேச்சின் முன் பகுதியையும், பின் பகுதியையும் நிறுத்தி விட்டு உள்நோக்கத்தோடு தவறான தலைப்பிட்டு செய்தியை அவதூறாக பரப்புகின்றனர். ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டினார்கள் என்றும் அதனால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்றும் சங்பரிவார் அமைப்பினர் கூறுகின்றனர்.

அப்படி என்றால் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான சிவன் கோவில்களும் பெருமாள் கோவில்களும் பவுத்த விகார்களையும் சமண கோவில்களையும் இடித்து விட்டுத்தான் கட்டி இருக்கிறார்கள்.

ஒரு வாதத்திற்கு சொல்கிறேன். சிவன் கோவில்கள், பெருமாள் கோவில்கள் இருக்கும் இடமெல்லாம் பவுத்த விகார்கள்தான் கட்ட வேண்டும் என்று தான் அக்கூட்டத்தில் நான் பேசினேன்.

இந்துகோவில்களை இடிப்போம் என்ற சொல்லாடலை நான் பயன்படுத்தவில்லை.

ஒரு வாதத்திற்காக நான் சொல்கிறேன் என்கிற வாக்கியத்தை வெட்டி விட்டு நான் சொல்லாத ஒரு வாக்கியத்தை செய்தி ஆக்கியிருக்கிறார்கள். என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் இவ்வாறு திட்டமிட்டு எனக்கு எதிரான அவதூறுகளை பரப்புவதை சிலர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: