வெள்ளி, 12 ஜனவரி, 2018

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்

thetimestamil  : கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான எச் ராஜாவின் கொலைவெறிப் பேச்சை கேட்டேன். அவர் ஒரு ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்பது மேலும் நிச்சயமாகிறது. “ஆண்டாள் ஒரு தேவதாசி” என்று ஓர் ஆய்வாளர் கூறியதை கவிஞர் மேற்கோள் காட்டியதற்குத்தான் “அவரது தலை உருள வேண்டும்” என்று தன் சகாக்களை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். இது ஆய்வுரிமை மீது, கருத்துரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.
ஆண்டாளைப் பற்றிய செய்திகளுக்கு ஆதாரம் அவரின் பாடல்கள் மற்றும் அவரைப் பற்றிய வைணவ நூல்களின் கூற்றுக்கள். அவற்றைப் படிக்கிற எவருக்கும் ஆண்டாள் ஒரு தேவதாசியாக இருக்கலாம் எனும் சந்தேகம் வராமல் போகாது. எச் ராஜாவே “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று பெருமையோடு பேசியிருக்கிறார். அதன் அர்த்தம் என்னவோ? தான் சூடிய மாலையை விஷ்ணுவிற்கு அனுப்பினால் அதன் பொருள் அந்தக் கடவுளை மணந்தார் என்பது. பொட்டுக்கட்டும் சடங்கில்தான் ஒரு கடவுளை மணப்பது வரும்.

அப்புறம், தனது பாடல்களில் விஷ்ணு தன்னை உறவுகொள்ள வரவேண்டும் என்று உருகி உருகிப் பாடியிருக்கிறார். இதர பெண்களைப் போல் சாதாரண மணவாழ்வை ஆண்டாள் வாழவில்லை என்றே வைணவ நூல்கள் கூறுகின்றன. இவற்றைக் கொண்டு ஓர் ஆய்வாளர் அத்தகைய ஒரு முடிவுக்கு வந்தால் அது பாவமா? தேவதாசி முறையே இல்லை என்று இந்த மனுவாதியால் கூற முடியுமா? அதை கடவுளின் பெயரால் பராமரித்தது வருணாசிரமவாதிகளே என்பதற்கு ஆழ்வார்கள் வாழ்வு பற்றிய “குரு பரம்பரை” நூலிலேயே ஆதாரம் உள்ளது.
எச். ராஜாவின் இந்த கொலை மிரட்டலை அனுமதித்தால் மெய்யான வரலாற்று ஆய்வுகளே தமிழகத்திலும் காணாமல் போய்விடும். தமிழகமும் வடமாநிலங்கள் போல பிராமணய உத்தரவுகளால் நிறைந்துவிடும். இந்து மதம் பல பிரிவுகளை உள்ளடக்கியது. அதில் ஒரு பிரிவுதான் பிராமணிய மதம். அதைச் சார்ந்தோர் “இந்து மதம்” என்பதன் பெயரால் உத்தரவுகள் போடுகிறார்கள். எச் ராஜா போன்றவர்கள் காத்தவராயனையும் மதுரைவீரனையும் முனியாண்டியையும் கருப்பணசாமியையும் வழிபடுவார்களா? மாட்டார்கள் என்பதை பஞ்சம, சூத்திர இந்துக்கள் உணர்ந்து கொண்டால் இவரைப் போன்றவர்களின் உண்மை சொரூபம் வெளிப்பட்டுப் போகும்.
பேராசிரியர். அருணனின் முகநூல் பதிவு.
முகப்பு ஓவியம் நன்றி: மணிஷா ராஜு

கருத்துகள் இல்லை: