செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

எடப்பாடி அரசை காப்பாற்றும் காங்கிரஸ் எம் எல் ஏக்கள் ... சிலிப்பர் செல்கள்?

விஜயதரணிஎடப்பாடி பழனிசாமிவிகடன் :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு உருவாகியுள்ளது. `அ.தி.மு.க-வின் விசுவாசியாகவே மாறிவிட்டார் விஜயதரணி. உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் பேசியது எந்தவகையிலும் சரியானது அல்ல. இதற்காக அவர் ராகுல்காந்தியைத் துணைக்கு அழைத்திருப்பது ஏற்புடையதல்ல' எனக் கொதிக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.
தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி அக்னியிலிருந்து புறப்பட்ட பீனிக்ஸ் பறவை போன்றது. இந்தியாவின் அரசியல் பக்கங்களில் தென்னகத்திலிருந்து இடம் பிடித்த முக்கியமான தலைவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவு இந்திய அரசியலில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது' என்றார். இந்தக் கருத்தையொட்டிப் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, 'இந்திரா காந்திக்குப் பிறகு, நாட்டின் மிகப்பெரிய தலைவராகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா. அவரது படத்தைத் திறப்பதில் தவறு இல்லை. வழக்கு விவகாரத்துக்கும் இதற்கும் முடிச்சு போடக் கூடாது. தண்டனையை எதிர்த்துமேல் முறையீடு செய்வதற்குள் அவர் மரணமடைந்து விட்டார். எனவே, வழக்கைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஜெயலலிதாவைப் பிடிக்கும்.
அவர் முதல்வராக இருந்தவர். சட்டமன்றத்துக்குள் ஆண் தலைவர்களின் படங்கள்தாம் நிரம்பியிருக்கின்றன. ஒரு பெண் தலைவரின் படம் இடம்பெறுவதில் என்ன தவறு' என்றார். படத்திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாகத் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரும் அறிவித்த பிறகு, விஜயதரணி எடுத்த நிலைப்பாட்டை அதிர்ச்சியுடன் கவனிக்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள். 'விஜயதரணிமீது நடவடிக்கை உறுதி' எனத் தெரிவித்திருக்கிறார் திருநாவுக்கரசர்.
கோபண்ணாகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் பேசினோம். "ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார் விஜயதரணி. இந்தக் கட்சியில் இனி அவர் ஒரு நிமிடம் நீடிப்பதற்குக்கூட தகுதியில்லை. இந்திராகாந்திக்குப் பிறகு, ஜெயலலிதாதான் என்னைக் கவர்ந்த தலைவர் என்று கூறியிருக்கிறார். இதற்கு அவர் மிகக் கௌரவமாக அ.தி.மு.க-வுடன் இணைந்து சோரம் போய்விடலாம். காங்கிரஸில் அவர் நீடிக்க வேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க-வின் செயல்பாடுகளுக்கு அவர் துணை போய்விட்டார். காங்கிரஸ் கட்சியில் பெரியளவில் எந்தப் பங்களிப்பும் அளிக்காத அவருக்குப் பதவி கொடுத்தது சோனியா காந்தி. அப்படியோர் இயக்கத்துக்குத் துரோகம் செய்யும் வகையில் இத்தகைய கருத்தைக் கூறுவது பச்சைத் துரோகம். 'ஜெயலலிதா இறந்தபோது ராகுல்காந்தி, திருநாவுக்கரசர், முகுல் வாஸ்னிக் ஆகியோர் ஏன் வந்தார்கள்' எனக் கேட்கிறார். அன்றைக்கு அவர்கள் வரும்போது ஜெயலலிதா நிரபராதி.
அதன்பிறகு, வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அவரைக் குற்றவாளி என அறிவித்தது. ஆனால், இறந்துவிட்டதால் அந்தத் தண்டனையைச் செயல்படுத்த முடியவில்லை. அவர் நிரபராதி எனக் கூறவில்லை. அவர் நிரபராதி என்றால் சசிகலாவை எப்படித் தண்டிக்க முடியும்? ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் சிறையில்தான் இருந்திருப்பார். ஜெயலலிதாவும் சசிகலாவும் கூட்டு சேர்ந்து ஊழல் செய்தனர் என்றுதான் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஜெயலலிதா புனிதமானவர்; சசிகலா குற்றவாளி என்று சொல்வதைவிட ஒரு மோசடி எதுவும் இருக்க முடியாது. இருவரும் சதி செய்துதான் சொத்து சேர்த்தார்கள்; ஒரே வீட்டில் இருந்துகொண்டு கூச்சமில்லாமல் ஊழல் செய்தார்கள் என்று நீதிமன்றம் கூறியது. அப்படிப்பட்டவருக்குப் புனித வேடம் போடும் வேலையை விஜயதரணி செய்வதைவிட இழிவான அரசியல் இருக்க முடியாது" என்றார் கொதிப்புடன்.
கோபண்ணாவின் கருத்து குறித்து நம்மிடம் பேசிய விஜயதரணி எம்.எல்.ஏ, "ஜெயலலிதாவைக் குற்றவாளி எனக் கொச்சைப்படுத்துக் கூடாது. அவர் ஒரு பெண் என்பதால் இதைச் சொல்கிறேன். நான் மறைந்த தலைவர்களைப் பற்றித்தான் பேசுகிறேன். அந்தவகையில் இந்திராகாந்திக்குப் பிறகு, ஜெயலலிதாவை முன்னிறுத்திப் பேசினேன். உயிருடன் உள்ள தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர் சோனியா காந்தி. அவர் தாமதமாக வந்தாலும் என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தைத் தந்தவர் அவர். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்தக் கட்சியில் 23 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறேன். அதைக் கருத்தில் கொண்டுதான் எனக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்தார். அதை நான் பெருமையாகப் பார்க்கிறேன். தன் கணவரைக் கொன்றவருக்குக்கூட இரக்கத்தைக் காண்பித்த பண்புள்ள தலைவர் சோனியா காந்தி. நான் சொல்வது ஆளும்கட்சிக்குச் சாதகமான கருத்து அல்ல.
ஜெயலலிதா படம் திறக்கவில்லையென்றால், எதிர்காலத்தில் எந்தப் பெண் தலைவரின் படமும் இடம் பெறப் போவதில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். பெண் தலைவரை அங்கீகாரப்படுத்தும் பணியில் தி.மு.க-வும் ஈடுபட்டிருக்க வேண்டும். அ.தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சேருமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்யும். அதில் கருத்துச் சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஜெயலலிதா படத்திறப்பு விழா குறித்து கருத்துச் சொன்னதற்காக என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதை நிச்சயம் எதிர்கொள்வேன். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியோடு தான் இருந்த படங்களைப் போயஸ் தோட்டத்து வீட்டிலும் அலுவலத்திலும் வைத்திருந்தார் ஜெயலலிதா. அவர் இறக்கும் வரையில் இந்தப் படங்கள் அவரது அறையை அலங்கரித்தன. பிரதமர் மோடி வந்தபோதும், அந்தப் படங்களை அவர் அகற்றவில்லை. அந்தத் துணிச்சல் எனக்குப் பிடித்திருந்தது. எங்கள் கட்சியின் தலைவர்களைப் பெருமைப்படுத்தியவர் அவர். அப்படிப்பட்டவரின் படத்தைத் திறப்பதில் என்ன தவறு. மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தவர், இறந்துவிட்டார். அவருக்கான அங்கீகாரத்தைக்கூடவா நான் மறுக்க வேண்டும்" என்றார் நிதானமாக.

கருத்துகள் இல்லை: