ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

மாலைதீவு அரசியல் அமெரிக்காவின் திட்டம் .... சீனாவின் பக்கம் அது ஏன் போகிறது?


மாலத்தீவு - புவி அரசியல்
தீக்கதிர் தலையங்கம்
பளிச்சென்று சொன்னால், மாலத்தீவில் நடந்து கொண்டிருப்பது அமெரிக்கா போட்ட திட்டம். புவி அரசியலில் ஏகாதிபத்தியத்தின் பக்கம் வலுவாக நகர்ந்து சென்றிருக்கிற மோடியின் இந்தியாவும் இந்த திட்டத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கிறது.முன்னாள் ஜனாதிபதி அப்துல் நசீத்துக்கு நல்லவர் வேடம் போட்டு களத்தில் இறக்கியிருக்கிறது அமெரிக்கா. மாலத்தீவு அரசியலில்அப்துல் நசீத்தையும், அவரது பரம எதிரியான முன்னாள் ஜனாதிபதி மவ்மூன் அப்துல் கயூமையும் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு எதிராக கைகோர்க்க வைத்திருக்கிறது. இவர்களில் அப்துல் கயூம், தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு ஒன்றுவிட்ட சகோதரர்தான். ஆனால் அதிகார வேட்கை, அவரை எதிரியுடன் கூட கைகோர்க்க வைத்திருக்கிறது. அப்துல்லா யாமீன், 2013 தேர்தலில் நசீத்தை பெரும் மக்கள் செல்வாக்குடன் தோற்கடித்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஆட்சி அமைந்தபிறகு நசீத்தின் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
கைது நடவடிக்கைகள் நடந்தன. ஆனால் இப்போது பிரச்சனை அதுவல்ல. யாமீன் அரசு பதவியேற்றது முதல், குட்டிநாடாக இருந்தாலும், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தள்ளியே வைத்திருக்கிறது. அதற்கு முன்பு நசீத் ஜனாதிபதியாக இருந்தபோது, இந்தியப்பெருங்கடலில் அமெரிக்காவின் மிக முக்கிய -முழுமையான ராணுவ தளமாகவே மாலத்தீவைமாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் என்பதை இப்போது நினைவு கூர வேண்டும். அப்போது அமெரிக்காவில் ஒபாமா தலைமையிலான அரசு இருந்தது. ஒபாமா அரசும் நசீத் அரசும் ராணுவப்படைகள் ஏற்பு ஒப்பந்தம் (சோபா) என்ற பெயரிலான உடன்பாட்டை வரையறை செய்தன. இதன்படி மாலத்தீவு முழுவதும் அமெரிக்காவின் படைகள் இறக்கப்பட்டு ராணுவத் தளங்களாக மாற்றுவது என திட்டமிடப்பட்டது.
இந்திய பெருங்கடலில் ஏற்கெனவே அமெரிக்காவின் மிகப் பெரும் ராணுவத் தளமாகடிகோ - கார்சியா என்ற தீவே மாற்றப்பட்டு நீண்டகாலமாக அமெரிக்காவின் பிடியில் இருக்கிறது.அங்கிருந்து ஒட்டு மொத்த ஆசிய நாடுகளையும் அமெரிக்கா கண்காணித்துக் கொண்டும் மிரட்டிக்கொண்டும் இருக்கிறது. அதே போல மாலத்தீவையும் மாற்றுவது; இங்கிருந்து நேரடியாக சீனாவையும் ரஷ்யாவையும் கண்காணிப்பது - இப்படியாக ஆசிய - பசிபிக் பிராந்தியம் முழுவதும் தனதுராணுவ கண்காணிப்பு மற்றும் சூழ்ச்சித் திட்டங்களுக்கான எல்லையை விரிவுபடுத்துவது தான்அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டம்.நல்ல வேளையாக 2013ல், இந்த ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்து ஆவதற்கு முன்பே மாலத்தீவு ஜனாதிபதி தேர்தலில் நசீத் தோல்வியடைந்து, யாமீன் வந்துவிட்டார். அவர் வந்ததும் செய்த முதல் வேலை, மேற்படி ஒப்பந்தத்தின் வரையறையிலிருந்து மாலத்தீவை விலக்கிக்கொண்டதுதான். மாறாக தனது வர்த்தக நலனைமேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தியாவுடனும் சீனாவுடனும் மிக நெருக்கமான உறவுகளுக்காக கரம் நீட்டியது யாமீன் தலைமையிலான மாலத்தீவு. அந்த சமயத்தில் இந்தியாவில் ஆட்சிக்கு வந்த மோடி அரசு, அமெரிக்காவின் நலன்களுக்கு இசையாத மாலத்தீவின் கரங்களைப் பற்றமறுத்தது. மக்கள் சீனம் பற்றிக்கொண்டது. இந்தபின்னணியில் பார்த்தால் மாலத்தீவின் இன்றையஅரசியல் நெருக்கடி ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டது என்பது புரியும்.

கருத்துகள் இல்லை: