வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

அதிமுக-பாஜகவின் துரோகம் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்: காவிரி ..ஸ்டாலின் பேட்டி

tamilthehindu :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட பிறகும் மத்திய அரசு அமைக்கவில்லை. காவிரி பிரச்சினையில் அதிமுக, பாஜகவின் துரோகத்தை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விபரம்:
"இன்று உச்ச நீதிமன்றம் அளித்து இருக்கின்ற தீர்ப்பு மிகப் பெரிய அதிர்ச்சியை தமிழக மக்களுக்கும், குறிப்பாக தமிழக விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. 14.75 டி.எம்.சி. தண்ணீர் குறைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருப்பது உள்ளபடியே வேதனைக்குரியது. தமிழ்நாட்டில் இன்று நடைபெற்று வரும் ஆட்சியானது உச்ச நீதிமன்றத்தை முறையாக அணுகாமல், அலட்சியத்துடன் கோட்டைவிட்டு இருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக, கர்நாடக மாநிலத்திற்கு நீதியும், தமிழ்நாட்டுக்கு அநீதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது காவிரி நடுவர் மன்றம், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவற்றை பெற்று தந்தார். ஆனால், அந்த உரிமைகளை எல்லாம் அதிமுக ஆட்சி பறிகொடுத்திருக்கிறது.
எனவே, இந்த அசாதாரணமான சூழ்நிலையில், உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கின்ற விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து, மேற்கொண்டு இந்த விவகாரத்தை எப்படி அணுகுவது என்பதை முடிவெடுப்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.
காவேரி நதி நீர் ஆணையம் அமைப்பது குறித்து காலக்கெடு எதுவும் விதிக்காமல் இருப்பதால் 120 டி.எம்.சி தண்ணீர் கிடைப்பதும் கடினம் என்று கூறப்படுகிறதே?
இதுகுறித்தே மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது உள்ளிட்ட தமிழகத்தின் நிலைப்பாடுகளை, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி திமுக சார்பில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்படுமா?
அரசுதான் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். நாங்கள் எத்தனையோ பிரச்சினைகளுக்காக இதற்கு முன்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தியிருக்கிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் கூட்டினால் பயன் இருக்குமா அல்லது நாங்கள் அழைத்தால் அதிமுக அந்தக் கூட்டத்தில் பங்கேற்குமா?
காவிரி விவகாரத்தில் திமுகதான் தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்தது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறாரே?
எத்தனையோ பிரச்சினைகள் தமிழ்நாட்டை சூழ்ந்துள்ளது. ஒரு அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தக்கூட இந்த ஆட்சிக்கு தகுதி இல்லை. பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் இதே கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபடவில்லை. எனவே, துரோகம் இழைத்தது யார் என்பது தமிழக மக்களுக்கும், தமிழக விவசாயிகளுக்கும் நன்றாகவே தெரியும்.''
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: