சனி, 17 மார்ச், 2018

ஓபிஎஸ், ஈபிஎஸ் பற்றிய முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன்: கே.சி.பழனிசாமி காட்டம்

tamilthehindu : என்னைக் கட்சியை விட்டு நீக்கிய ஓபிஎஸ், ஈபிஎஸ் பற்றிய முக்கிய ஆதாரங்களை நாளை வெளியிடுவேன் என்று கே.சி.பழனிசாமி காட்டமாக பதிலளித்துள்ளார்.
அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலிருந்து முக்கியப் பொறுப்பில் இருப்பவர் கே.சி.பழனிசாமி. அதிமுகவில் எம்.பி., எம்எல்ஏ என பதவி வகித்தவர். ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து வெளியேறி தனி அணி அமைத்தபோது உடனிருந்தவர். இந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கருத்து தெரிவித்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
தனது நீக்கம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கே.சி.பழனிசாமி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் கடுமையாக விமர்சித்தார்.
இது தொடர்பாக கே.சி.பழனிசாமி கூறியதாவது:
''இவர்கள் யார் என்னை நீக்க? நான் எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சியில் இருப்பவன், எனக்குப் பிறகு அதிமுகவுக்கு வந்தவர்கள் தான் இந்த இருவரும்,
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் எம்ஜிஆருடன் ஒரு புகைப்படம் எடுத்திருப்பார்களா? காட்டச்சொல்லுங்கள்.எந்த இடத்தில் நான் கட்சியின் கொள்கைகளையும் கோட்பாட்டையும் மீறினேன் என்று அவர்கள் விளக்கவேண்டும்.
அதிமுகவின் பதவித் திருத்தங்களையே தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை, அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளரும் இல்லை, ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளரும் இல்லை. அப்படி இருக்கும் போது அவர்கள் எப்படி என்னை நீக்க முடியும். நான் ஆதாரத்தை பத்திரிகையாளர் முன்பு நாளை வெளியிடுவேன்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தால் அது காவிரி நீரை பெற்றுத்தர சாதகமாக இருக்கும் என்றுதான் நான் விவாத நிகழ்ச்சியில் பேசினேன். ஜெயலலிதா காவிரி நீருக்காக உண்ணாவிரதம் இருந்து உரிமையை பெற்றுத்தந்தவர். ஆனால் இவர்கள் இருவரும் என்ன செய்தார்கள்?
ஓபிஎஸ்ஸுக்கு வேண்டுமானால் மோடியிடம் பயம் இருக்கலாம். ஏனெனில் அவர் மீது பல ஊழல் வழக்குகள் இருக்கலாம். ஆனால் எனக்கு அதுபோல் பயமில்லை. நான் எம்ஜிஆரால் கட்சியில் சேர்க்கப்பட்டவன். ஜெயலலிதாவால் எம்.பி., எம்.எல்.ஏ ஆக்கப்பட்டவன்.
சசிகலாவை எதிர்த்து நான்தான் முதன் முதலில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தவன். அன்று சசிகலாவிடம் கையைக் கட்டிக்கொண்டு காலில் விழுந்தவர் ஓபிஎஸ்.நான் தமிழகத்தின் நன்மைக்காக அதிமுக மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். ஆனால் இவர்கள் மோடிக்கு பயந்துகொண்டு என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளனர். இதற்கு அவர்கள் முறையான விளக்கம் அளிக்க வேண்டும்.''
இவ்வாறு கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: