வியாழன், 15 மார்ச், 2018

நடிகர் சஞ்சய் தத் இற்கு சொத்துக்களை உயில் எழுதிய அமரதத்துவ ரசிகை ... குடும்பத்தாருக்கே திருப்பி கொடுத்த சஞ்சய்

Mumbai fan leaves all her money to actor Sanjay Dutt
பாலிவுட்டின் புகழ்ப்பெற்ற நட்சத்திர ஜோடியான சுனில் தத் நர்கீஸ் ஜோடியின் மூத்த மகன் சஞ்சய் தத். குழந்தை நட்சத்திரமாக திரை உலகிறகு அறிமுகமாகி, திறமையான நடிகராக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டார். சாஜன், கல்நாயக், முன்னாபாய் எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 1971-ம் ஆண்டு முதல் நடித்து வரும் சஞ்சய் தத் வேடமிட்டு நடிக்காத கதாபாத்திரமே கிடையாது எனும் அளவுக்கு ஹீரோ, வில்லன், காமெடியன், கேமியோ, நடிகன், தீவிரவாதி, என எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை கச்சிதமாகப் பொருத்திக் கொண்டு நடிப்பில் பல உச்சங்களைத் தொட்டவர்.
  இதுவரை சிறந்த நடிப்பிற்காக 19 விருதுகளைப் பெற்றுள்ள சஞ்சய் தத் சர்ச்சைகளில் சிக்கி சிறைவாசம் சென்றிருக்கா விட்டால், பாலிவுட்டில் மிகப் பெரிய அளவில் முன்னணியில் இருந்திருப்பார். ஆனால் அவரது சகவாச தோஷத்தால் வீட்டில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தாக, 1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.


இந்த வழக்கில் தொடர்ந்து 18 மாதங்கள் சஞ்சய் தத் சிறையில் அடைக்கப்பட்டார். 1995-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்தவர், அதன் பின் 2007-ம் ஆண்டு மும்பை தடா நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை விதித்தது. உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் மேல்முறையீடு செய்ய, தடா நீதிமன்றம் விதித்த தண்டனையில் ஒரு ஆண்டினை குறைத்து ஐந்து ஆண்டுகளாக அத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.

2013-ம் ஆண்டு முதல் புனே எரவாடா சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்தவர், நன்னடத்தைக் காரணமாக தண்டனைக் காலம் முடியும் முன்பே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

  சிறையிலிருந்து வெளிவந்ததும் சஞ்சத் தன் தலை தாழ்த்தி மண்ணைத் தொட்டு வணங்கினார். சிறை வாயிலில் காவலர்களுக்கு குட் பை சொல்லும்விதமாக ‘சல்யூட்’ அடித்தார். இனிமேல் சுதந்திரமாக நடப்பது கடினமான விஷயம் என்ற கசப்பான உண்மையை உணர்ந்தார் சஞ்சய் தத். அவர் நடித்த சினிமா படங்களின் காட்சிகளை மிஞ்சும் விதமாக அவரது சொந்த வாழ்க்கையே அமைந்துவிட்டது. கல்நாயக் படத்தில் தீவிரவாதியாக நடித்தவர், அதே வருடம் கைது செய்யப்படுகிறார். தண்டனைக் காலம் முடிந்து அவரை வரவேற்க அவரது மனைவி மான்யா தத்தும் குழந்தைகள் இக்ரா மற்றும் ஷகரன் ஆகியோரும் வந்திருந்தனர். அவரது நண்பரும், முன்னாபாய் எம்.பி.பி.எஸ். பட இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்ட சில திரைப் பிரபலங்களும் அவருக்காக சிறை வாசலில் காத்திருந்தனர். பிரியத்துரியவர்களைக் கட்டியணைத்து கண்ணீர் விட்ட சஞ்சய் தத், பின்னர் தனி விமானம் மூலம் மும்பை திரும்பினார்.

சஞ்சய் தத்தின் இந்த கடுமையான நாட்களில் அவருடன் உறுதுணையாக இருந்தவர்கள் அவரது குடும்பம், நெருங்கிய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள்தான். அவர் மீதிருந்த ஆழமான அன்பால் அண்மையில் ரசிகை ஒருவர் தான் இறக்கும் முன்பு தனது பெயரில் இருக்கும் சொத்துக்களை சஞ்சய் தத் பெயரில் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்தார். இது ஹிந்தி ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானது. மும்பையை சேர்ந்த நிஷி த்ரிபாதி என்ற அந்த ரசிகை உடல் நலக் குறைவால் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய்க்கான சிகிச்சை பலனின்றி சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது வயது 62. சஞ்சய் தத் மீதான தனது பேரன்பை உலகிற்கு அறிவிக்கும்படியாக தனது சொத்துக்களை அவருக்கு உயில் எழுதி வைத்துவிட்டு அவர் இறந்துள்ளார் என்ற செய்தி பின்னர் தெரிந்தது. மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்த அவர் சஞ்சய்தத்தின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார்.

ஹரிச்சந்திரா த்ரிபாதியின் வங்கி கணக்கு, லாக்கர் ஆகியவற்றை வங்கி அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது, ‘தனது இருப்பில் உள்ள பணம், லாக்கரில் இருக்கும் தனது பொருட்கள் அனைத்தையும் நடிகர் சஞ்சய் தத்துக்கே தரப்பட வேண்டும்’ என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சஞ்சய் தத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



ஹரிச்சந்திராவின் பேரன்பைப் பற்றியறிந்த சஞ்சய் தத் மனம் நெகிழ்ந்தார். சொத்து முழுவதையும் அந்த ரசிகை தனக்கு எழுதி வைத்திருந்ததை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அதனை ஏற்க மறுத்த அவர், மறைந்த ரசிகையின் பணம், பொருட்கள் அனைத்தையும் அவருடைய குடும்பத்தாருக்கே திருப்பிக் கொடுக்க தகுந்த ஏற்பாடுகளைச் செய்தார். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்தார்.

இப்படியும் ஒரு நடிகர், இப்படியும் ஒரு ரசிகை! தற்போது பாடிபட் என்ற படத்தில் அர்ஜுன் கபூர், க்ரிதியுடன் நடிக்கவிருக்கிறார் சஞ்சய் தத். மாலைமலர

கருத்துகள் இல்லை: