திங்கள், 14 மே, 2018

கூகுளின் புதிய வசதிகள்,, ஹலோ யாரு? நான் கூகுள் பேசுறேன்!" - கலக்க வரும்

கூகுள் I/Ovikatan.com- மு.ராஜேஷ்&  :  உலகம் முழுவதும் இருக்கும் பலதரப்பட்ட மனிதர்களின் டேட்டாவை கையில் வைத்திருக்கும் கூகுளுக்கு எதிர்காலத்தில் அவர்களுக்கு எது தேவைப்படும் என்பதைக் கணிப்பது மிகச் சுலபமான வேலைதான். தொழில்நுட்பத்தைப்  பொறுத்தவரையில் AI தான் இனிமேல் எதிர்காலம் என்று முடிவெடுத்துவிட்டது கூகுள். அதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது கூகுளின் இந்த வருட  I/O டெவெலப்பர் மாநாடு. இதில் கூகுள் அறிமுகப்படுத்திய புதிய வசதிகள் பெரும்பாலானவை செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டதுதான். நேற்று முன்தினம் தொடங்கிய இந்த மாநாடு இன்றோடு முடிவடையப்போகிறது.
மூன்று நாள்கள் இந்த நிகழ்வு நடந்தாலும் முதல் நாள் என்பது கொஞ்சம் ஸ்பெஷல்தான். மற்ற இரண்டு தினங்களில் டெவெலப்பர்களுக்கான விஷயங்கள் மட்டுமே அதிகம் இருக்கும். ஆனால், முதல் நாளில் அப்படி கிடையாது. அன்றைக்கு நிகழ்வில் கூகுள் அறிமுகப்படுத்திய புதிய தயாரிப்புகளில் முக்கியமானவை இவை.
கூகுள் அசிஸ்டென்ட்
கூகுள் அசிஸ்டென்ட்
இந்த மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது மேம்படுத்தப்பட்ட கூகுள் அசிஸ்டென்ட். இதுதான் ஏற்கெனவே இருக்கிறதே என சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்தும்போது நினைத்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தற்பொழுது இருக்கும் மற்ற வாய்ஸ் அசிஸ்டென்ட்களை விடவும் பல வகைகளில் மேம்பட்டதாக இதை வடிவமைத்திருக்கிறது கூகுள். சக மனிதரைப் போலவே நம்முடன் உரையாடும் திறன் இதற்கு இருக்கிறது. தற்பொழுது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் கூகுள் அசிஸ்டன்டை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு முறையும் "ஓகே கூகுள் " என்று சொல்ல வேண்டியிருக்கும். ஆனால்,  இனி அதற்கு அவசியமிருக்காது ஒரு முறை அழைத்தாலே நம்முடன் உரையாடலைத் தொடங்கிவிடும். மனிதர்கள் பேசிக்கொள்ளும்போது பயன்படுத்தும் நுணுக்கங்களையும்கூட இது பயன்படுத்துகிறது. இது எப்படிச்  செயல்படும் என்பதை டெமோ காட்டினார் சுந்தர் பிச்சை. முடி வெட்டுவதற்கு அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டும் எனக் கூகுள் அசிஸ்டென்ட்டிடம் கூறவும் கடைக்கு கால் செய்தது. அப்படியே நிஜ மனிதரைப் போலவே உரையாடலை ஆரம்பித்தது. இடையே கடையில் இருந்தவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்தும் வகையில் "mm-hmm” என்றெல்லாம் கூறி முடி வெட்டுவதற்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கியதைப் பார்த்து அசந்துபோனார்கள் அங்கிருந்தவர்கள். கூகுள் ட்யூப்ளெக்ஸ் எனப்படும் இந்தத் தொழில்நுட்பம் AI-யோடு இணைந்து செயல்படும். இதற்காக deep learning, natural language processing மற்றும் text-to-speech ஆகிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்திருக்கிறது கூகுள்.
கூகுள்  போட்டோஸ்
கூகுள்  போட்டோஸ்
ஸ்மார்ட்போன்களில் எடுக்கும் போட்டோக்களை AI-மூலமாக மேம்படுத்தும் வசதியை ஏற்கெனவே கூகுள் கொடுத்திருந்தது. அதை இன்னும் சற்று மேம்படுத்தியிருக்கிறது. இதன் மூலமாக ஒரு போட்டோவை AI ஆராய்ந்து பார்க்கும், பின்னர் அதில் இருக்கும் குறைகளை கண்டுபிடித்து அதை எப்படி மேம்படுத்தலாம் என்பதைக் தெரிவிக்கும். இதன் மூலமாக ஒரே கிளிக்கில் ஒரு புகைப்படம் எடிட் செய்யப்பட்டு விடும். அது எப்படிச்  செயல்படுகிறது என்பதைக் காண்பிக்க சுந்தர் பிச்சை காட்டியது ஒரு கறுப்பு வெள்ளை போட்டோ. அதை மொபைல் கேமராவில் எடுத்து கலராக மாற்ற வேண்டும் என்றால் அது கடினமான காரியம். ஆனால்  AI-க்கு மிகவும் அது எளிதான விஷயம். போட்டோவை ஒரே நொடியில் கலராக மாற்றிக் காண்பிக்கிறது. இதில் இருக்கும் மற்றொரு வசதி AI அதில் இருப்பவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்கு இந்த போட்டோவை ஷேர் செய்யலாம் என்று பரிந்துரை செய்யும். ஷேர் செய்ய விரும்பினால் ஒரே கிளிக்கில் ஷேர் செய்ய முடியும் .
Healthcare
மருத்துவத் துறையில் AI மிகப்பெரிய மாற்றத்தைக்  கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் சுந்தர் பிச்சை . இதுதொடர்பாக இந்தியாவில் இரண்டு தனியார் கண் மருத்துவமனைகளுடன் இணைத்திருக்கிறது கூகுள். ரெட்டினாவை AI ஆராய்வதன் மூலமாக எதிர்காலத்தில் வரக்கூடிய குறைபாடுகளை அது கணித்துவிடும் என்கிறார். அதே ரெட்டினாவை ஆராய்வதன் மூலமாக எதிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளையும் கணித்துவிட முடியுமாம். ஒருவரின் உடலில் இருந்து பெறப்படும் டேட்டாவை வைத்து மருத்துவர்கள் ஆராயும் வேகத்தை விடவும் பல மடங்கு வேகத்தில் அவற்றை ஆராய முடிவதால்   AI-யால் சிறப்பாக செயல்பட முடிகிறது.
ஜிமெயில்
ஜிமெயில்
கடந்த சில நாள்களுக்கு முன்னர்தான் ஜிமெயிலுக்குப் புதிய தோற்றத்தையும்,புதிய வசதிகளையும் கொண்டு வந்திருந்து கூகுள். மீண்டும் ஒரு புதிய வசதி கூடிய விரைவில் இடம்பெறப்போகிறது. இனிமேல் ஜிமெயிலிலும்கூட AI கலக்க போகிறது. Smart Compose என்ற செயற்கை நுண்ணறிவோடு இணைந்து செயல்படும் வசதியை அறிமுகப்படுத்தினார் சுந்தர் பிச்சை. ஒருவருக்கு மெயில் அனுப்ப டைப் செய்யும்போது முதல் வார்த்தையை டைப் செய்யும்போதே அந்த வாக்கியத்தை முழுமையாக்க இது பரிந்துரைகள் செய்யும். இதன் மூலமாக முன்பைவிட ஒரு மெயிலை விரைவாக டைப் செய்துவிட முடியும்.
கூகுள் மேப்ஸ்
கூகுள் மேப்ஸ்
கூகுள் மேப்பை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு அது வழிகாட்டும் திசையைப் புரிந்துகொள்வதற்குச் சிரமமாக இருக்கும். ஓர் இடத்துக்கு மேப் காட்டும் வழியில் செல்லும்போது எந்தப் பக்கமாக திரும்ப வேண்டும் என்று தெரியாமல் குழம்பி நிற்பார்கள். ஆனால், இனி அதற்கு அவசியம் இருக்காது. கேமராவை தெருவுக்கு நேராகக் காட்டினால் போதும் ஆக்மென்ட் ரியாலிட்டி முறையில் வழிகளைக் காட்டும். இது தவிர 'For You' என்ற வசதி மூலமாக அந்த இடத்தில் அருகே இருக்கும் சிறந்த உணவகங்களை மேப் காட்டும் , ' Your Match' என்ற வசதி மூலமாக ஒருவரின் ரசனைக்கு ஏற்ற உணவகங்களைப் பார்க்க முடியும். 
தானியங்கி கார்
தானியங்கி கார்
கூகுளின் தானியங்கி கார் பிரிவுதான் Waymo. இது ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றுதான். ஆனால், தற்பொழுது மேடையில் இதைப் பற்றி பேசுவதற்கும் காரணம் இருக்கிறது. 2030-ம் ஆண்டில் உலகில் இருக்கக்கூடிய தானியங்கி கார்களில்  Waymo-வின் பங்கு  60 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். சமீப காலமாக தானியங்கி கார்கள் ஏற்படுத்திய விபத்துகளால் அதன் பாதுகாப்பு பற்றிய விவாதங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தான் AI-யின் சிறப்புகள் பற்றியும் அது எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றியும் தெளிவாக விளக்கியிருக்கிறது கூகுள்.


ஆண்ட்ராய்டு   P-யின் பீட்டா வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். கடந்த பத்து வருடங்களில் மக்களுக்குக்  கணினிகள் பக்கம் இருந்த பார்வையை ஸ்மார்ட்போன் பக்கம் திருப்பியதில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூகுள் தெரிவித்திருக்கிறது. AI-யோடு இணைந்து செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிக்கிறது. ஆண்ட்ராய்டு P-யில் முன் எப்பொழுதையும்விட UI-ல் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமான மாற்றமாக ஹோம் பட்டன் மாற்றியமைக்கப்பட்டிக்கிறது. மொபைல் பயன்பாட்டை குறைப்பதற்காக இதில் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன இதன் மூலம் ஒருவர் மொபலை எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் என்று அறிந்துகொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை: